2011 உ.கோ வெற்றி மீண்டும் வருகிறதா? அஹமதாபாத்தில் அரிதான நிகழ்வை அரங்கேற்றிய இந்தியா

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு ஒரு லட்சம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 20, இமாம்-உல்-ஹக் 36, பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு நல்ல ரன்களை எடுத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அரிதான நிகழ்வு:
இருப்பினும் அவர்களைத் தொடர்ந்து மிடில் ஓவர்களில் அனல் பறக்கப் பந்து வீசிய இந்தியாவுக்கு தாக்கு பிடிக்காத சவுத் ஷாக்கில் 6, இப்திகார் அகமது 4, சடாப் கான் 2, முகமது நவாஸ் 4 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பாகிஸ்தான் 200 ரன்கள் கூட தொட முடியாத அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். குறிப்பாக பாபர் அசாம் இருக்கும் வரை அந்த அணி 155/2 என்ற நல்ல நிலைமையில் இருந்ததால் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பின் இந்திய பவுலர்கள் மேற்கொண்டு 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்து பாகிஸ்தானை சுருட்டி மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்தார்கள். அந்தளவுக்கு மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்டிக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

பொதுவாகவே ஒரு போட்டியில் ஒரு சில பவுலர்கள் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி நிறைய விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதனால் இப்படி 5 பவுலர்கள் சரிக்கு சமமாக 2 விக்கெட்டுகளை எடுப்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் 1975 முதல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் இப்படி 5 இந்திய பவுலர்கள் சமமாக 2 விக்கெட்டுகளை எடுப்பது இது 2வது முறையாகும்.

இதையும் படிங்க: 2011 உ.கோ வெற்றி மீண்டும் வருகிறதா? அஹமதாபாத்தில் அரிதான நிகழ்வை அரங்கேற்றிய இந்தியா

இதற்கு முன் கடந்த 2011 உலகக் கோப்பையில் மொகாலியில் நடைபெற்ற அரையிறுதியில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக ஜஹீர் கான், முனாப் பட்டேல், ஆசிஸ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகிய 5 பவுலர்கள் தலா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். மேலும் அப்போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தது போலவே இப்போட்டிலும் 10 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. எனவே 2011 போல இம்முறையும் சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் தற்போது கூடுதலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement