ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய 5 மறக்க முடியாத தருணங்கள்

Gamutam Gambhir Kamran Akmal IND vs Pak Asia Cup
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாகத் துவங்கிய ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகள் கடந்த 10 வருடங்களாக எல்லைப் பிரச்சினை காரணமாக இரு தரப்பு தொடர்களை தவிர்த்து இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளின் மவுசு எகிறியுள்ள நிலையில் கடைசியாக இதே துபாயில் மோதியபோது உலக கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது.

அதற்கு இம்முறை இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்பதே அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் முக்கிய காரணமாகும். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய செய்திகளை படிக்கும் போதோ அல்லது பார்க்கும்போதோ “பரம எதிரிகள்” என்ற வார்த்தையை கேட்காமல் இருக்க முடியாது. இவ்விரு அணிகளும் அண்டை நாடுகள் என்பதால் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்காக முழுமூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

அனல் பறந்த போட்டிகள்:
நாட்டின் வெற்றிக்காக மோதும் போது எந்த எல்லையையும் கடக்க தயங்காத வீரர்கள் நாட்டுக்காக களத்தில் நேருக்கு நேர் வார்த்தை போரிலும் கைகலப்பிலும் ஈடுபடுவதற்கும் தங்குவது கிடையாது. அது போன்ற சண்டைகளால் ஏற்படும் அனல் பறக்கும் தருணங்களே இந்தியா – பாகிஸ்தான் போதும் போட்டிகளில் ஸ்பெஷலாகும். அந்த வகையில் ஆசிய கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய 5 மறக்க முடியாத அனல் பறந்த போட்டிகளைப் பற்றி பார்ப்போம்:

5. மிரட்டிய ஓப்பனிங்: கடைசியாக 2018இல் துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் மட்டும்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே தொடரில் 2 போட்டிகளில் மோதின. அந்த 2 போட்டிகளிலும் இந்தியா எளிதாக வென்ற நிலையில் 2வது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 238 ரன்களை துரத்தும் போது ஜோடி போட்ட ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை அடித்து நொறுக்கினர்.

- Advertisement -

அதில் ஷிகர் தவான் அதிரடியாக 114 (100) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய கேப்டன் ரோகித் சர்மா 119* (111) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

4. இளம்சிங்கம் விராட்: 2012இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முகமது ஹபீஸ் மற்றும் நாசர் ஜம்சேத் ஆகியோரது சதத்தால் 329 ரன்கள் குவித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கௌதம் கம்பீர் டக் அவுட்டாகி ஏமாற்றி நிலையில் 2வது விக்கெட்டுக்கு இந்தியாவின் நிகழ்காலமும் எதிர்காலமும் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது போல் சச்சினும் விராட் கோலியும் இணைந்து இந்தியாவை தூக்கி நிறுத்தினர்.

- Advertisement -

அதில் சச்சின் 52 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் இளம் சிங்கமாக வெளுத்து வாங்கிய விராட் கோலி சதமடித்தும் ஓயாமல் 22 பவுண்டரி 1 சிக்சருடன் 183 (148) ரன்கள் விளாசி தனது கேரியரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றிபெற வைத்தார்.

3. அஷ்வினும் அப்ரிடியும்: கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அம்பத்தி ராயுடு 58, ரோகித் சர்மா 56, ரவீந்திர ஜடேஜா 52* ஆகியோரது பங்களிப்பால் 50 ஓவர்களில் 245/8 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய பாகிஸ்தானுக்கு 75 ரன்கள் எடுத்து போராடிய முகமது ஹபீஸ் உட்பட 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த தமிழகத்தின் அஷ்வின் போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

- Advertisement -

இருப்பினும் கடைசியில் அஃப்ரிடி அதிரடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது அதை அப்போட்டியில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அஷ்வினிடம் வழங்கினார். அதில் முதல் பந்திலேயே சயீத் அஜ்மலை அவுட்டாக்கிய அஷ்வின் வீசிய 3, 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்து மெகா சிக்ஸர்களை பறக்கவிட்ட அப்ரிடி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் அஷ்வினை கலாய்க்க நினைத்தால் இப்போதும் அந்தத் தருணத்தை தான் பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தூக்கிக் கொண்டு வருவார்கள்.

2. கம்பீரின் மாஸ்: 2010 ஆசிய கோப்பையை இந்திய ரசிகர்கள் எப்போதும் மறக்கவே மாட்டார்கள். அந்த தொடரில் தோற்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 268 ரன்களை துரத்தும் போது அசத்தலாக பேட்டிங் செய்த கௌதம் கம்பீர் 83 (97) ரன்களை குவித்து இந்தியாவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார்.

அந்த இன்னிங்ஸ் விளையாடிய போது நிகழ்ந்த ட்ரிங்க்ஸ் பிரேக்கில் வம்புக்கு வந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்கு கொஞ்சமும் சளைக்காமல் சீறிப்பாயும் வகையில் கவுதம் கம்பீர் மைதானத்திலேயே சண்டையில் ஈடுபட்டார். இறுதியில் அம்பயர்கள் உள்ளே புகுந்து சண்டையை தடுத்து நிறுத்தியதை யாராலும் மறக்க முடியாது.

1. ஹர்பஜன் பினிசிங்: அதே போட்டியில் அப்படி நல்ல தொடக்கத்தை கொடுத்து கம்பீர் அவுட்டானதும் மிடில் ஆர்டரில் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டானது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தது. அப்போது மிரட்டிய ரெய்னாவும் 34 (27) ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். அதற்கு முன்பாகவே 23 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது தனது பந்தில் ஹர்பஜன் சிங் அசால்டாக சிக்சர் அடித்தால் கடுப்பான சோயப் அக்தர் அவரிடம் சில வார்த்தைகளைப் பேசி வம்பிழுத்தார்.

அதை அம்பயர் புகுந்து பெரிய அளவில் சண்டையாக மாறாமல் பார்த்துக் கொண்ட நிலையில் ரெய்னா அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது முகமது ஆமிர் வீசிய 5வது பந்தில் மெகா சிக்சரை பறக்க விட்ட ஹர்பஜன் சிங் வெறித்தனமான பினிஷிங் கொடுத்தார். அதை சமாளித்த சோயப் அக்தரின் முகத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.

Advertisement