என்ன நியாயம் ! தரமாக செயல்பட்டும் தமிழக வீரர் உட்பட 4 பேரை கண்டுக்காத தேர்வுக்குழு – ரசிகர்கள் கோபம்

Natarajan Nattu SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஆரம்பம் முதலே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அணிகளும் விளையாடிய அதில் விளையாடிய வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்ற நோக்கம் மட்டுமல்லாமல் இந்தியாவிற்காக விளையாட வேண்டுமென்ற தாகத்துடன் விளையாடினர். ஏனெனில் என்னதான் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்தாலும் ஒரு உண்மையான கிரிக்கெட் வீரனுக்கு தாய் நாட்டுக்காக விளையாடுவதே மிகப்பெரிய கவுரவமாகும்.

Yashsvi Jaiswal

- Advertisement -

குறிப்பாக இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் நடைபெறுவதால் அதில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் நிறைய வீரர்கள் முன்கூட்டியே ஐபிஎல் தொடரில் முழு மூச்சை கொடுத்து முடிந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தினர். அதில் ஒருசில வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்திருந்தனர். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட அதற்கான இந்திய அணியில் ஒருசில தரமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது ரசிகர்களையே கோபமடைய வைத்துள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

1. ராகுல் திரிபாதி: ஒருசில வீரர்கள் என்னதான் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டாலும் நட்சத்திர பெயரை எடுக்கத் தவறினால் அவர்களை இந்திய தேர்வு குழுவினர் கண்டுகொள்ளாததை பலமுறை பார்த்துள்ளோம். அப்படி ஒரு வீரர் தான் ராகுல் திரிப்பாதி ஆவார்.

Rahul Tripati

தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பிறந்து மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர் 2017 முதல் புனே, ராஜஸ்தான் கொல்கத்தா ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக இதுவரை 76 போட்டிகளில் 10 அரை சதங்கள் உட்பட 1798 ரன்களை 140.80 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இந்த வருடம் கூட 8.5 கோடி என்ற பெரிய தொகைக்கு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் 14 போட்டிகளில் 413 ரன்களை 158.24 என்ற சூப்பரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். ஏற்கனவே 31 வயது கடந்த இவரை மீண்டும் தேர்வு குழு கண்டுக்காதது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

natarajan

2. நடராஜன்: தமிழகத்தின் யார்கர் கிங் என அழைக்கப்படும் நடராஜன் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் 2020இன் இறுதியில் இந்தியாவிற்காக 3 வகையான அணியிலும் வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2021இல் காயத்தால் வெளியேறிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிலிருந்து குணமடைந்து ஹைதராபாத் அணிக்காக விளையாடிய 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்திய அணியில் காயத்தால் வெளியேறிய அவர் இதனால் மீண்டும் தென் ஆப்ரிக்க தொடரில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் பெயரைக் கூட தேர்வுக்குழுவினர் தொடாதது தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

3. சஞ்சு சாம்சன்: எந்த ஒரு இளம் வீரருக்குமே தொடர்ச்சியாக வாய்ப்பையும் ஆதரவு அளித்தால் தான் அவர்கள் பெரிய அளவில் வருவார்கள். ஆனால் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் 2015இல் முதல் முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு 1 போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டு சொதப்பினார் என்பதற்காக கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

அதன்பின் 2020இல் 6 வாய்ப்புகளைப் பெற்று அவர் 2021, 2022இல் 5 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். அவரும் அந்த வாய்ப்பை கச்சிதமாக பிடிக்க தவறிய நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானின் கேப்டனாக இதுவரை பங்கேற்ற 14 போட்டிகளில் 374 ரன்களை 147.24 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். தற்போது நிறைய முன்னேற்றங்களை கண்டுள்ள இவருக்கும் தேர்வு குழு வாய்ப்பளிக்கவில்லை.

Abishek Sharma

4. அபிஷேக் சர்மா: 2018 முதல் டெல்லி, ஹைதெராபாத் அணிக்காக பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்து வந்த இளம் வீரர் அபிஷேக் வர்மா இம்முறை 6.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு ஐதராபாத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் களமிறங்கிய கேன் வில்லியம்சனை மிஞ்சும் அளவுக்கு 14 போட்டிகளில் 426 ரன்களை 133.13 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த இவரும் இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு தகுதியுடையவர் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

ரசிகர்கள் வேதனை: இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் மேற்குறிப்பிட்ட வீரர்கள் அனைவரையும் தேர்வு செய்ய முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஆனால் இதே ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சோபிக்காத இஷான் கிசான், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களை தேர்வு செய்யும்போது இவர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்க கூடாது என்பதே ரசிகர்களின் வேதனையான கருத்தாக இருக்கிறது.

இதையும் படிங்க : ரசிகர்களை மகிழ்விப்பதில் ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட 2022 சீசன் – பிரமாண்ட வளர்ச்சி தான்

ஒருவேளை வீரர்களை ஐபிஎல் அடிப்படையில் தேர்வு செய்யவில்லையெனில் எதற்காக ஹர்திக் பாண்டியா போன்ற சமீபத்தில் நாட்டுக்காக சிறப்பாக விளையாடதவர்களை மீண்டும் தேர்வு செய்தீர்கள் என்று ரசிகர்கள் நியாயமான கேள்வி கேட்கின்றனர்.

Advertisement