
இந்திய அணியானது இந்த ஆண்டு அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வின்றி பங்கேற்று வரும் வேளையில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்த கையோடு தற்போது அடுத்த தொடரில் விளையாடவும் தயாராகிவிட்டது. அந்த வகையில் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதனால் இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணியானது தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த டி20 தொடரினை இந்திய அணி வென்றுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று மழை காரணமாக நின்ற சில மணி நேரங்களிலேயே இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய நான்கு வீரர்களும் போட்டி நின்றது என்று அறிவிக்கப்பட்ட கையோடு உடனடியாக பிரிஸ்பேன் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து நேரடியாக கொல்கத்தா புறப்பட்டனர்.
இதற்கு காரணம் யாதெனில் : சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.
இதன் காரணமாக இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முறையான பயிற்சி தேவை என்பதற்காகவே நேரடியாக பிரிஸ்பேனில் இருந்து அந்த நான்கு வீரர்களும் உடனடியாக கொல்கத்தா புறப்பட்டனர். மற்ற வீரர்கள் இன்று பொறுமையாக இந்தியா கிளம்பியுள்ள வேளையில் தென்னாப்பிரிக்க தொடருக்காக தயாராக வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் இந்த வீரர்கள் நால்வரும் அங்கிருந்து இந்தியாவிற்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை தொடருக்குள் இதை கொஞ்சம் மாத்திக்கோங்க.. அபிஷேக் சர்மாவுக்கு – இர்பான் பதான் அட்வைஸ்
அதேவேளையில் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ள மற்ற இந்திய வீரர்களான கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் போன்ற நட்சத்திர வீரர்கள் ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சிகளை மேற்கொண்டது மட்டுமின்றி தற்போது கொல்கத்தா சென்றடைந்து அங்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.