ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தவற விட்டாலும் டிஎன்பிஎல் தொடரில் அசத்தும் – 3 தரமான தமிழக வீரர்கள்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. முன்னதாக அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு வளர்க்கும் நோக்கத்துடன் 2008இல் உருவாக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் முரளி விஜய், சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக செயல்பட்டு வெற்றிகளிலும் பங்காற்றி உயர்ந்தார்கள்.

Natarajan Washingtan Sundar Hari Nishanth

- Advertisement -

அதே போல பந்து வீச்சில் லக்ஷ்மிபதி பாலாஜி முதல் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த பவுலராக சாதனை படைத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று இந்தியாவின் ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு வளர்வதற்கான உதவியை ஆரம்ப காலங்களில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை கொடுத்தது என்றே சொல்லலாம். இருப்பினும் சமீப காலங்களில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வரும் அந்த அணி கடந்த வருடம் வரை பெஞ்சில் வைத்திருந்த ஹரி நிஷாந்த், சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோரை இந்த வருடம் மொத்தமாக கழற்றி விட்டது.

டிஎன்பிஎல் நட்சத்திரங்கள்:
அதனால் பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத சென்னை அணி நிர்வாகம் மீது நிறைய தமிழக ரசிகர்களே கோபத்தில் இருக்கின்றனர். இருப்பினும் ஒரு கதவை மூடினால் மறுக்கதவு திறக்கும் என்பது போல் சென்னையில் வாய்ப்பு பெறாமலேயே நடராஜன், வாஷிங்டன் சுந்தர் முதல் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் வரை நிறைய தமிழக வீரர்கள் இதர ஐபிஎல் அணிகளில் அசத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் தொடரில் தவற விட்டு விட்டோமே என்று சென்னை வருந்தும் அளவுக்கு அசத்தும் சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

Shahrukh-Khan-2

3. சாருக்கான்: சயீத் முஷ்டாக் அலி உள்ளூர் தொடரில் சிக்சர் அடித்து கோப்பையை வென்று கொடுத்த பெருமை கொண்ட இவர் தமிழகத்தின் பினிஷராக ரசிகர்களால் போற்றப்படுகிறார். அதனாலேயே பஞ்சாப் அணியில் 9 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் இந்த டிஎன்பிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு இதுவரை களமிறங்கிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து கோவை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங்கில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியான ரன்களை எடுத்து ஃபினிஷிங் செய்து வரும் அவர் பவுலராக 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 5.00 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து ஆல் ரவுண்டராகவும் மிரட்டி வருகிறார். அப்படிப்பட்ட அவர் தோனிக்கு பின் சென்னை அணியில் கேப்டனாகவும் ஃபினிஷராகவும் செயல்படும் திறமை கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது.

Varun-Chakaravarthy

2. வருண் சக்கரவர்த்தி: டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக்கின் பரிந்துரையால் வாங்கப்பட்டு அசத்திய இவர் இந்தியாவுக்காக 2021 டி20 உலக கோப்பையில் தேர்வானார். இருப்பினும் அந்த வாய்ப்பை தக்க வைக்க தவறிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக சென்னையை சேப்பாக்கத்தில் வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றிய அவரை நெட் பவுலராக இருந்தும் தவற விட்டுவிட்டோம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வெளிப்படையாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அந்த நிலையில் இந்த டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்காக 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை 7.18 என்ற எக்கனாமியில் எடுத்துள்ள அவர் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

Sai Sudharsan

1. சாய் சுதர்சன்: டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் குஜராத் அணிக்காக வாங்கப்பட்ட இவர் 145 ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றிய நிலையில் இந்த வருடம் 8 போட்டிகளில் 362 ரன்களை எடுத்து அசத்தினார். குறிப்பாக மாபெரும் ஃபைனலில் 96 ரன்கள் குவித்த அவர் சென்னையை அடித்து நொறுக்கியது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க:வெளியே தான் தோனி கேப்டன் கூல் ஆனா அணிக்குள் விராட் கோலி, என்னை திட்டுவாரு – பின்னணியை பகிர்ந்த இஷாந்த் சர்மா

அதே வேகத்தில் இந்த டிஎன்பிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் 330* ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை அவர் தன்வசம் வைத்துள்ளார், அதனால் இவரையும் தவற விட்டு விட்டோமே என்று சென்னை வந்து அளவுக்கு அவர் அசத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.

Advertisement