மகத்தான எம்எஸ் தோனியால் தொட முடியாமல் போன தரமான ரிக்கி பாண்டிங்கின் 3 சாதனைகளின் பட்டியல்

Ponting-1
- Advertisement -

வரலாற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு பின் 90களில் உலக கிரிக்கெட்டை ஆளத் துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் ஆகியோரது வரிசையில் தரமான கேப்டனாக உருவெடுத்த ரிக்கி பாண்டிங் தமக்கு வரமாகக் கிடைத்த ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ஷேன் வார்னே போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களை வைத்து உலகின் அத்தனை எதிரணிகளையும் தெறிக்க விட்டார் என்றே கூறலாம். தரமான வீரர்கள் இருந்தும் வரலாற்றில் நிறைய கேப்டன்கள் உலக கோப்பையை தொட்டு பார்க்க முடியாத நிலையில் 2003, 2007 ஆகிய அடுத்தடுத்து உலக கோப்பைகளை அசால்டாக வென்ற அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றிகளை பெற்று நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தது.

ponting-captaincy

- Advertisement -

அதனால் ரிக்கி பாண்டிங் போன்ற ஒருவர் தங்களுக்கு கேப்டனாக கிடைக்க மாட்டாரா என்று காலம் காலமாக ஏங்கிய இந்திய ரசிகர்களுக்கு வரமாகக் கிடைத்தவர் தான் எம்எஸ் தோனி. ஆம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத நிலையில் அனைத்து வீரர்களையும் மிகச் சிறப்பாக வழிநடத்தி வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று காட்டிய அவர் 2010இல் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர்களை ஒருங்கிணைத்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார்.

3 சாதனைகள்:
அதைவிட 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையையும் வென்று காட்டிய அவர் 2013இல் தாம் கண்டெடுத்த விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். ரிக்கி பாண்டிங் 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை என்ற நிலைமையில் அவரையும் மிஞ்சும் வகையில் வரலாற்றில் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையை எம்எஸ் தோனி படைத்துள்ளார்.

Trophies Won By MS Dhoni

குறிப்பாக ரிக்கி பாண்டிங் தலைமையில் விளையாடிய அத்தனை வீரர்களும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக இருந்த நிலையில் தனது அணியில் முக்கால்வாசி உலகத்தரம் வாய்ந்த வீரர்களையும் கணிசமான சுமாரான வீரர்களை வைத்து வரலாற்று வெற்றிகளை பதிவு செய்த தோனி மகத்தானவர் என்றே கூறலாம். இருப்பினும் தோனியால் எட்ட முடியாத பாண்டிங்கின் சில முக்கிய சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. வெளிநாட்டு டெஸ்ட்: எம்எஸ் தோனி வெள்ளைப் பந்து கேப்டனை விட எம்எஸ் தோனி சிவப்பு பந்து அதாவது டெஸ்ட் கேப்டன் வரலாற்றில் சுமாராகவே செயல்பட்டுள்ளார் என்று கூறலாம். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 2011இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 4 – 0 என்ற கணக்கில் படு மோசமான தோல்விகளை சந்தித்தது.

Dhoni

2009இல் நியூசிலாந்தில் (1 – 0) வெற்றி, 2011இல் தென்னாப்பிரிக்காவில் சமன் (1 – 1) ஆகிய சாதனைகளை தவிர்த்து பெரும்பாலும் அவரது தலைமையில் தோல்விகளை சந்தித்த இந்தியா வெறும் 6 வெற்றிகளை 24% என்ற மோசமான வெற்றி விகிதத்தில் மட்டுமே பெற்றது. மறுபுறம் வெளிநாடுகளில் ரிக்கி பாண்டிங் தலைமையில் 38 போட்டிகளில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 19 வெற்றிகளை 50% என்ற சராசரியில் அசத்தியது.

- Advertisement -

2. உலககோப்பை: 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று 2011இல் ஹாட்ரிக் உலக கோப்பையை முத்தமிட வந்த ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா மண்ணை கவ்வ வைத்து வீட்டுக்கு அனுப்பியது. மேலும் 2003 உலகக் கோப்பை பைனலில் பாண்டிங் மற்றும் 2011 உலகக் கோப்பை பைனலில் தோனி ஆட்டநாயகன் விருது வென்று சரிக்கு சமமாக திகழ்கிறார்கள்.

Dhoni

இருப்பினும் 2011, 2015 ஆகிய 2 உலகக் கோப்பைகளிலும் 17 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய தோனி 14 வெற்றிகளை 85.29% என்ற சராசரியில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவரை விட ஒரு உலககோப்பை அதிகமாக வென்றுள்ள பாண்டிங் 2003, 2007, 2011 ஆகிய 3 உலகக் கோப்பைகளில் 29 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு 26 வெற்றிகளை 92.85% என்ற அதிகமான சராசரியில் குவித்துள்ளார்.

1. கேப்டன்ஷிப் விகிதம்: இந்திய கிரிக்கெட்டில் சௌரவ் கங்குலி, கபில் தேவ் ஆகியோரையும் மிஞ்சும் வகையில் அதிக போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த தோனி அதிக வெற்றிகளையும் உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த பெருமையை பெற்றுள்ளார். இருப்பினும் அவரது தலைமையில் 9 ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்தியா 3 மட்டுமே வென்றது. மேலும் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அவரது தலைமையில் 331 போட்டிகளில் 178 வெற்றிகளை 53.78% என்ற சராசரியில் இந்தியா பெற்றது.

Dhoni

மறுபுறம் 2004, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் பாண்டிக்கு தலைமையில் தோற்ற ஆஸ்திரேலியா இதர தொடர்களில் கோப்பையை வென்றது. மேலும் அவரது தலைமையில் 324 போட்டிகளில் 220 வெற்றிகளை 67.90% என்ற வெற்றி சராசரியில் குவித்துள்ளதால் தோனியை விட பாண்டிங் மகத்தான கேப்டனாக திகழ்கிறார்.

Advertisement