ஐபிஎல் 2022 தொடர் கடந்த 2 மாதங்களாக ரசிகர்களை எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் மகிழ்வித்து முடிந்துள்ளது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்றதால் கோப்பையை வெல்வதற்கு கடந்த சீசன்களை விட இருமடங்கு போட்டி காணப்பட்டது. அதில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் ஆரம்பத்திலேயே சந்தித்த தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றது ஆச்சரியமாக அமைந்தது.
இந்த தொடரில் ஜோஸ் பட்லர் போன்ற குறிப்பிட்ட வீரர்களைத் தவிர பெரும்பாலான வீரர்கள் கோடிக்கணக்கில் வாங்கிய சம்பளத்துக்கு சிறப்பாக செயல்படவில்லை என்றே கூறலாம். அதிலும் 15.25 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட இஷான் கிசான் முதல் போட்டியை தவிர பெரும்பாலும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது மும்பைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பரிசளித்தது. அதேபோல் தீபக் சஹர் போன்ற ஒருசில வீரர்கள் பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகியும் காயத்தால் விலக நேரிட்டது.
விளையாடாமல் 1 கோடி:
முன்னதாக இந்த தொடருக்காக நடந்த ஏலத்தில் 204 வீரர்கள் ஏலம் போன நிலையில் 50 – 60% வீரர்களைத் தவிர எஞ்சிய வீரர்கள் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்திருந்தனர். இருப்பினும் 20 – 90 லட்சங்கள் வரை வாங்கப்பட்ட வீரர்களில் 50% மேற்பட்டோர் குறைந்தது ஒரு போட்டியில் களமிறங்கினர். ஆனால் 1 கோடிக்கும் மேல் வாங்கப்பட்ட வீரர்களில் 3 பேரை தவிர எஞ்சிய அனைவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடினார்கள். அப்படி ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஒரு கோடியை சம்பளமாக அள்ளிய 3 பேர்களை பற்றி பார்ப்போம்.
1. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்: கடந்த பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளராக அசத்தியில் இவரை ஏலத்தின் போது 1.5 கோடி என்ற நல்ல தொகைக்கு சென்னை நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது. 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயத்தால் விலகியதால் அவரைப்போலவே கணிசமாக பேட்டிங் செய்ய கூடிய இவர் முதல் போட்டியிலேயே களமிறங்குவார் என்று முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் முகேஷ் சவுத்ரி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்த சென்னை அணி நிர்வாகம் இவருக்கு கடைசிவரை வாய்ப்பளிக்கவில்லை.
குறிப்பாக கொடியை பிடித்து ரசிகர்களுடன் ரசிகராக விசிலடித்துக் கொண்டிருந்த இவரை பார்த்த ரசிகர்கள் இதற்குத்தானா வாங்கினீர்கள் என்று சென்னை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்டர்-19 லெவெலில் மட்டுமே சிறப்பாக செயல்பட்ட இவரிடம் திறமை இருப்பதால் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் உடனடியாக தள்ளிவிட்டு வீணடிக்க விரும்பவில்லை என்று எம்எஸ் தோனி, ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் அடுத்த வருடம் வாய்ப்பு பெற காத்திருக்கும் இவர் ஐபிஎல் ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே 1.7 கோடிகளை இந்த வயதிலேயே சம்பாதித்து விட்டார்.
2. ஜெயந் யாதவ்: கடந்த 2015 முதல் டெல்லி, மும்பை போன்ற அணிகளுக்காக விளையாடி வரும் இவருக்கு இதுவரை எந்த அணி நிர்வாகமும் ஒரு சீசனில் 5 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பளித்ததில்லை. இதுவரை 19 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை 6.87 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ள அவரை இந்த வருடம் 1.70 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.
ஆனால் ரஷித் கான் எனும் தரமான சுழல்பந்து வீச்சாளருடன் ராகுல் திவாதியா, சாய் கிசோர் விளையாடியதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதால் இறுதிவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத இவர் ஐபிஎல் கோப்பையுடன் 1.70 கோடிகளை சம்பாதித்துள்ளார்.
Congrats to Dominic Drakes who has now won 2 IPL titles in a row
2021 with Chennai
2022 with Gujarat
West Indians win you T20 titles pic.twitter.com/94BjV1ZDQF
— Caribbean Cricket Podcast (@CaribCricket) May 29, 2022
3. டாமினிக் ட்ரெக்ஸ்: வெஸ்ட் இண்டீசை தேர்ந்த இந்த இளம் வீரர் கடந்த வருடம் சென்னை அணியில் இடம் வகித்த போதும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் 2021 ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சமீபத்திய ஏலத்தின் போது இவரை விடுவித்தது. அதனால் இவரை 1.10 கோடி என்ற நல்ல தொகைக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. ஒரு ஆல்-ரவுண்டரான இவர் ஹர்திக் பாண்டியா இருந்த காரணத்தால் குஜராத் அணியிலும் வாய்ப்பு பெறவில்லை.
இருப்பினும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் சென்னையில் கோப்பையை வென்று அவர் தற்போது குஜராத்திலும் கோப்பையை வென்றதுடன் இந்த வருடம் 1.10 கோடிகளை சம்பாதித்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.