சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான அம்பயர்களால் இந்தியா தோல்வியடைந்த 3 மறக்க முடியாத போட்டிகள்

Bucknor
- Advertisement -

கிரிக்கெட்டில் நடுவராக செயல்படுவதற்காக அடிப்படை விதி முறைகளைப் பற்றிய சிறப்பு வகுப்புகளில் கற்றுத் தேர்ந்து சோதனை தேர்வில் தேர்ச்சி பெற்று சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்படுபவர்கள் தராசு போல சரியான முடிவுகளை எடுப்பது முக்கியமானதாகும். இருப்பினும் அவர்களும் மனிதர்கள்தான் என்ற வகையில் எப்போதாவது தவறான தீர்ப்புகளை வழங்குவதில் அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை எனலாம். அதன் காரணத்தாலேயே ஒரு காலத்தில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாக இருந்தது.

ஆனால் 1990 – 2010 வரையிலான காலகட்டத்தில் நிறைய தருணங்களில் சில நடுவர்கள் தவறான தீர்ப்புகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக சில அம்பயர்கள் வேண்டுமென்றே தவறான தீர்ப்புகளை வழங்கி தோல்விக்கு முக்கிய பங்காற்றிய காலங்களும் உண்டு. குறிப்பாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஸ்டீவ் பார்ட்னர் இந்தியாவை கண்டாலே பிடிக்காது என்ற வகையில் நிறைய போட்டிகளில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதால் வெற்றியடைய வேண்டிய போட்டிகளில் இந்தியா தோற்றதை ரசிகர்கள் மறக்கவே முடியாது.

- Advertisement -

3 தோல்விகள்:
அதிலும் குறிப்பாக ஸ்டீவ் பக்னர் போன்றவர்கள் காரணமாக சச்சின் டெண்டுல்கர் 90களில் அவுட்டாகி குறைந்தது 5 – 10 சதங்களை தவற விட்டிருப்பார். அப்படி வரலாற்றில் நிறைய போட்டிகளில் நடுவர்களின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகளால் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் தோல்விக்கு காரணம் நடுவரின் மோசமான தீர்ப்பு தான் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத 3 தருணங்களை பற்றி பார்ப்போம்:

3. தோள்பட்டை விக்கெட்: கிரிக்கெட்டில் ஒரு பவுலர் ஸ்டம்ப்பை குறிபார்த்து பந்துவீசும் போது அதை அடிக்க தவறும் பேட்ஸ்மேன் தனது காலில் வாங்கினால் எல்பிடபிள்யூ எனப்படும் லெக் பிபோர் விக்கெட் முறையில் அவுட் கொடுக்கப்படுவார். பெயரிலேயே லெக் எனப்படும் கால் இருக்கும் போது காலில் பட்டால் தான் இந்த வகையில் பெரும்பாலும் அவுட் கொடுக்கவேண்டும். ஆனால் 1999இல் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 396 ரன்களை துரத்திய இந்தியா 24/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கிளென் மெக்ராத் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை விட்டு விடலாம் என நினைத்து குனிந்தபோது துரதிஷ்டவசமாக அவரின் உடல் உயரத்திலேயே வந்த பந்து அவருடைய கையில் பட்டது. அதற்காக கிளன் மெக்ராத் அவுட் கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் அம்பயர் டார்ல் ஹார்பார் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் அதிர்ச்சியுடன் சச்சின் டக் அவுட்டாகி செல்ல இந்தியா 285 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அந்தப் பந்தை ரீப்ளேயில் பார்க்கும் போது ஸ்டம்ப்பில் படாமல் தவறி சென்றதால் இப்போதும் அதை நினைக்கும் போது ரசிகர்கள் கோபமடைவார்கள்.

2. அம்பயரான பாண்டிங்: பொதுவாக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில் கில்லாடி என்று ஆசிய ரசிகர்கள் கூறுவார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் இதுவாகும். ஆம் சைமன்ஸ் – ஹர்பஜன்சிங் மோதிய மங்கி கேட் உட்பட சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் 2008இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற 2வது போட்டியில் நடுவர்கள் ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் ஆகியோர் மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்டதை ரசிகர்கள் மறக்கவே முடியாது.

- Advertisement -

அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மாவிடம் எட்ஜ் வாங்கிய போதிலும் அந்த சத்தம் தனது காது கேட்கவில்லை என்று ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்காமல் காப்பாற்றினார். அதன்பின் ஸ்டம்பிங் செய்த தோனி அவுட் கேட்க அதற்கு செவி சாய்க்காத மற்றொரு நடுவர் மார்க் பென்சன் 3வது நடுவரை அணுக மறுத்தார். ஆனால் ரீப்ளேயில் பார்க்கும்போது அது அவுட் என நன்றாக தெரிந்தது. அதற்கடுத்த சில ஓவர்களில் மீண்டும் அதே வகையான ஸ்டம்ப்ங்கில் நடுவரால் சைமன்ஸ் காப்பாற்றப்பட்டார்.

அதுபோக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் லெக் சைடில் எட்ஜ் கொடுத்த போதிலும் மீண்டும் அம்பயர் மார்க் பென்சன் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் இந்தியா பேட்டிங் செய்யும் போது பிரட் லீ வீசிய நோ-பாலில் வாசிம் ஜாபரை மார்க் பென்சன் அவுட் கொடுத்தார். அதன்பின் ராகுல் டிராவிட் காலில் பந்து பட்ட போதிலும் அவரின் பேட்டில் பந்து பட்டதாக நினைத்து ஸ்டீவ் பர்ட்னர் அவுட் கொடுத்தார்.

- Advertisement -

அதைவிட உச்சகட்டம் என்னவெனில் 2வது இன்னிங்சில் மைக்கேல் கிளார்க் பிடித்த ஒரு கேட்ச் தரையில் பட்ட போதிலும் ரிக்கி பாண்டிங் சொன்னார் என்பதற்காக 3வது நடுவரை கூட அணுகாமல் அம்பயர் அவுட் கொடுத்தார். அப்படி பார்ட்னர்ஷிப் போட்டு மோசமாக நடந்துகொண்ட நடுவர்களால் இந்தியா 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

1. கொதித்த கொல்கத்தா: கடந்த 1999இல் கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 279 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 143/2 என்ற நிலைமையில் விளையாடிக்கொண்டிருந்த சச்சின் ஒரு கட்டத்தில் 3 ரன்கள் எடுக்க ஓடிய போது குறுக்கே சோயப் அக்தர் ஓடி வந்ததால் கீழே விழுந்த சச்சின் ரன் அவுட்டானார்.

அதை ஸ்டீவ் பக்னர் மற்றும் டேவிட் ஆர்ச்சர்ட் ஆகியோர் ரன் அவுட் கொடுத்தனர். ஆனால் குறுக்கே ஷோயப் அக்தர் வந்ததால் தான் சச்சின் அவுட்டானார் என்பதால் கொதித்தெழுந்த கொல்கத்தா ரசிகர்கள் 1996இல் மைதானத்துக்கு தீயை வைத்ததை போல் தங்களது கூச்சலால் எதிர்ப்பைத் தெரிவித்து காவலர்களை மிஞ்சி போட்டியை நடத்த விடாமல் செய்தனர். அப்போது பெவிலியனில் இருந்து வந்த சச்சின் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் போட்டியை விட்டு வெளியேறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால் இறுதியில் காலி மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியாவும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Advertisement