ஐபிஎல் 2022 : டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ள மும்முனை பிரச்சனை! சமாளித்து வெற்றி பெறுமா? – விவரம் இதோ

Dc
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் 65 ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

ipl

- Advertisement -

இந்த சீஸனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் மும்முனை பிரச்சனை:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக மும்பையில் அனைத்து அணிகளும் தீவிர வலை பயிற்சியை தொடங்கியுள்ளன. சமீப காலங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கோப்பையை நெருங்கிய போதிலும் தொட முடியாமல் இருந்து வருகிறது. எனவே இந்த வருடம் எப்படியாவது முதல்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பண்ட் தலைமையில் அந்த அணி களமிறங்க தயாராகி வருகிறது. இருப்பினும் அந்த அணிக்கு ஆரம்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் நிலவி வருவதை அந்த அணி சமாளிக்குமா என்பதை பற்றி பார்ப்போம்.

dc

1. டேவிட் வார்னர் : கடந்த வருடங்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் நன்றி உணர்ச்சி இல்லாமல் கழட்டி விட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் அவரின் திறமையை உணர்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் சற்றும் யோசிக்காமல் தங்கள் அணிக்கு பெரிய தொகை கொடுத்து வாங்கியது. ஆனால் தற்போது பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அதன்பின் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

இதனால் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே அவர் டெல்லி அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி ஒரு கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்த பின்புதான் ஒரு ஆஸ்திரேலிய வீரர் இதர தொடரில் பங்கேற்க முடியும். அந்த வகையில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று தான் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் இணைவார். அதன்பின் ஐபிஎல் விதிப்படி 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் ஐபிஎல் தொடரின் ஆரம்ப பகுதியில் டெல்லி அணிக்காக அவரால் விளையாட முடியாது.

warner

2. மிட்சேல் மார்ஷ்: அவரைப்போல டெல்லி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் மிட்செல் மார்ஷ் தற்போதைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் அதன் பின் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். எனவே அவரும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பின்பு மட்டுமே டெல்லி அணியில் இணைந்து 3 நாட்கள் தனிமைப் படுத்திக்கொண்ட பின்புதான் களமிறங்க முடியும்.

- Advertisement -

3. அன்றிச் நோர்ட்ஜெ: கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்ட காரணத்தால் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அன்றிச் நோர்ட்ஜெவை டெல்லி கேப்பிடல்ஸ் தக்க வைத்தது. குறிப்பாக தொடர்ச்சியாக 150 கீ.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணிகளை அச்சுறுத்திய காரணத்தால் மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவை கூட தக்க வைக்காமல் இவரை டெல்லி அணி நிர்வாகம் தக்க வைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த வருடம் துபாயில் நடந்த ஐசிசி டி20 உலக கோப்பையில் காயமடைந்த அவர் அதன்பின் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

தற்போது சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கூட அவரின் பெயர் இடம்பெறவில்லை. எனவே இவரும் குறைந்தது ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் டெல்லி அணிக்காக விளையாட மாட்டார் என தெரியவருகிறது.

தீர்வு என்ன:
இப்படி முக்கியமான 3 வீரர்கள் இல்லாத குறையை சமாளித்து இந்த ஐபிஎல் தொடரை டெல்லி அணி எப்படி வெற்றியுடன் துவக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் நியூசிலாந்தைச் சேர்ந்த அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் ஷைபர்ட் நியூசிலாந்து அணிக்காக பலமுறை தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் பெற்றவர். எனவே டேவிட் வார்னருக்கு பதில் பிரிதிவி ஷா உடன் 2-வது ஓபனிங் பேட்ஸ்மேனாக அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மிட்சேல் மார்ஷ் விளையாடும் மிடில் ஆர்டரில் இந்திய வீரர் மந்தீப் சிங் களமிறங்கி இப்போதைய நிலைமையை சமாளிக்க கூடிய திறமை கொண்டவர்.

Lungi

எனவே 3-வது இடத்தில் கேஎஸ் பரத், 4-வது இடத்தில் ரிஷப் பண்ட் என்ற வகையில் டெல்லி அணியின் பேட்டிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அன்றிச் நோர்ட்ஜெ இடத்தில் வேறு வழியின்றி தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடியை பயன்படுத்த வேண்டிய நிலைமை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement