வரலாற்றில் சிறிய கேரியராக இருந்தாலும் பெரிய சாதனை படைத்த 3 இந்திய வீரர்களின் பட்டியல்

Binny
- Advertisement -

கிரிக்கெட்டில் இந்தியா எனும் தங்களது தாய் நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடுவதற்கு தங்களது ஆரம்ப கால வாழ்வை அர்ப்பணித்து உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைக்கும் வீரர்கள் தேசத்துக்காக விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்கள். அதில் கிரிக்கெட்டை கற்று வளர்ந்த உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் திறமையை நிரூபிக்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் பெரும்பாலான வீரர்கள் தாங்கள் அறிமுகமாகும் தொடர்களில் சுமாராகவே செயல்படுவார்கள்.

ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் ஆரம்ப காலத்தில் தடுமாறுவார்கள் என்பதன் அடிப்படையில் பெரும்பாலான வீரர்களுக்கு நிச்சயமாக தேவையான அளவு வழங்கப்படும் போது அதில் ஒரு கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும் குறிப்பிட்டளவு வீரர்கள் நாளடைவில் நட்சத்திரங்களாக உருவெடுத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். அதன் காரணமாக அது போன்ற வீரர்கள் நீண்ட காலம் விளையாடி அதற்கேற்றார் போல் நிறைய சாதனைகளை படைப்பார்கள். ஆனால் சில வீரர்கள் வருங்காலத்தில் ஜாம்பவானாக வரப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு ஆரம்பத்திலேயே அசத்தலாக செயல்படுவார்கள்.

- Advertisement -

பெரிய சாதனைகள்:
அதிலும் அறிமுக போட்டியிலேயே சதம், 5 விக்கெட்களை எடுப்பது போன்ற மைல்கல் சாதனைகளை தொடும் சில வீரர்கள் ஜாம்பவானாக வரவேண்டிய பெரிய கேரியருக்கு வித்திடுவார்கள். ஆனால் அதில் சிலர் குறிப்பிட்டளவு போட்டிகளுக்கு பின் ஒருசில வருடங்களிலேயே காயம் அல்லது சுமாரான பார்ம் காரணமாக சோடை போய் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக செயல்பட்டு எதிர்பாராத வகையில் காணாமல் போய்விடுவார்கள். இருப்பினும் ஆரம்பத்திலேயே அசத்திய அவர்கள் சிறிய கேரியராக இருந்தாலும் காலத்துக்கும் பேசும் அளவுக்கு சில சாதனைகளை படைத்து விட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் சிறிய கேரியாராக இருந்தாலும் சில பெரிய சாதனைகளைப் படைத்த 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:

3. யூசுப் பதான்: வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் வெல்வதற்கு அந்த சீசனில் 37 பந்துகளில் விளாசிய சதம் உட்பட 400க்கும் மேற்பட்ட ரன்களை 170+ ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட இவர் அதன் காரணமாக அந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2009, 2010 ஆகிய காலகட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவில் செஞ்சூரியனில் நடந்த ஒரு போட்டியிலும் எதிரணிகளை பிரித்து மேய்ந்த அவர் அடுத்த வீரேந்திர சேவாக் வந்து விட்டார் என எதிர்பார்க்கும் அளவுக்கு பட்டையை கிளப்பினார்.

- Advertisement -

ஆனால் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான அவர் 2012 வாக்கில் பார்மை இழந்து சுமாராக செயல்பட்டதால் அணியிலிருந்து காணாமல் போனார். அதனால் வெறும் 5 வருடங்கள் மட்டுமே நீடித்த அவரின் கேரியரில் இந்திய மண்ணில் 18 போட்டிகளில் 345 ரன்களை 132.18 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அடித்த அவர் வரலாற்றில் இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (குறைந்தது 250 பந்துகளை எதிர்கொண்டவர்கள்) கொண்ட வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 5 வருடங்களே விளையாடினாலும் 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

2. ஸ்டுவர்ட் பின்னி: முன்னால் இந்திய ஜாம்பவான் ரோஜர் பின்னியின் மகனான இவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கும் அளவுக்கு 2014இல் அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்டார். குறிப்பாக 2014இல் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒரு போட்டியில் வெறும் 105 ரன்களை இந்தியா கட்டுப்படுத்திய போது எரிமலையாக பந்துவீசிய அவர் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் கதையை முடித்தார்.

- Advertisement -

அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் (6/4) என்ற வரலாற்றை படைத்த அவர் அதன்பின் சுமாராக செயல்பட்டதால் 2015லேயே வெறும் 14 போட்டிகளில் மட்டும் விளையாடியிருந்த நிலையில் இந்திய அணியிலிருந்து வெளியேறினார்.

1. நரேந்திர ஹிர்வாணி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 1988இல் தமிழகத்தின் சென்னை மண்ணில் அப்போதைய வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அன்றைய தினம் சுழலுக்கு ஏகப்பட்ட சாதகமாக அமைந்த சென்னை பிட்ச்சில் தனது மொத்த திறமையையும் வெளிப்படுத்திய அவர் முரட்டுத்தனமான வெஸ்ட் இண்டீஸை சாய்க்கும் வகையில் முதல் இன்னிங்சில் 8/61 மற்றும் 2வது இன்னிங்சில் 8/75 என 16 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அதன் வாயிலாக ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்து வீச்சை (16/136) பதிவு செய்த பவுலர் என்ற உலக சாதனையையும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற பெருமையையும் இன்றைய தேதி வரை பெற்றுள்ளார். 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாப் மாசி உள்ளார் (16/137, இங்கிலாந்துக்கு எதிராக, லார்ட்ஸ், 1972). இருப்பினும் அடுத்த சில போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அவர் அதன்பின் 1996 வரை வெறும் 17 போட்டிகளில் மட்டுமே விளையாடி 66 விக்கெட்களுடன் விடைபெற்றார். மேலும் அந்த காலகட்டத்தில் 18 ஒருநாள் போட்டிகளில் 23 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisement