IND vs AUS : ஆஸ்திரேலிய டி20 தொடரில் அழுத்தத்தில் விளையாடப்போகும் 3 இந்திய நட்சத்திர வீரர்கள்

IND vs RSA Chahal Axar Patel
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் இங்கேயே கோப்பையை வெல்ல முடியாத இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே உலக கோப்பையை வெல்லப்போகிறது என கவலையடைந்துள்ள இந்திய ரசிகர்கள் ஆசிய கோப்பையில் பங்கேற்ற கிட்டத்தட்ட அதே அணி உலகக் கோப்பைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் கலக்கமடைகின்றனர். அந்த நிலைமையில் உலகக் கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் 6 டி20 போட்டியில் விளையாடும் இந்தியா முதலாவதாக நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது.

INDvsAUS

- Advertisement -

வரும் செப்டம்பர் 20இல் துவங்கும் அந்த தொடரில் பும்ரா போன்ற சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் முகமது சமி மற்றும் தீபக் சஹர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதைவிட சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்த சில வீரர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்ள இந்த தொடரில் களமிறங்குகின்றனர். அதிலும் சில வீரர்கள் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டே தீரவேண்டும் என்ற அழுத்தத்தில் விளையாட உள்ளதை பற்றி பார்ப்போம்:

3. ரிஷப் பண்ட்: கடந்த 2017 முதல் இதுவரை 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளைப் பெற்றும் அதில் ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு இதுவரை எப்போதுமே சிறப்பாக செயல்படாத இவர் ஆசிய கோப்பையில் மீண்டும் சொதப்பியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்டு கொடுத்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டு அணி நிர்வாகத்தை தலைகுனிய வைத்த பின்பும் இவர் உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Rishabh Pant

அதன் காரணமாக தனது தேர்வை நியாயப்படுத்துவதற்காக இந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய இவர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியுள்ளதால் நிச்சயமாக அழுத்தத்தில் விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. யுஸ்வென்ற சஹால்: கடந்த 2017 முதல் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி இவர் கடந்த வருடம் பார்மை இழந்து சுமாராக செயல்பட்டதால் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் அதன்பின் கடுமையாக உழைத்து 2022 ஐபிஎல் தொடரில் அற்புதமாக செயல்பட்டு ஊதா தொப்பியை வென்று பார்முக்கு திரும்பி மீண்டும் நிலையான இடத்தைப் பிடித்த இவர் ஆசிய கோப்பையில் எந்த போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசவில்லை.

Chahal

இத்தனைக்கும் முதன்மை சுழல்பந்து வீச்சாளராக உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவருக்கு போட்டியாக கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர் இருக்கின்றனர். அதனால் உலக கோப்பையில் எந்தவித கேள்வியுமின்றி முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு நிறைய விக்கெட்டுகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தில் இவர் விளையாட உள்ளார்.

1. கேஎல் ராகுல்: 2019க்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் ரன் மெஷினாக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நிரந்தரமான இடத்தைப் பிடித்த இவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற பெரிய தொகையை எட்டியுள்ளது. அதனால் அந்த மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இவர் சமீப காலங்களில் அணியின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது இறுதியில் தோல்வியை பரிசளிக்கிறது.

KL Rahul

அதனால் ஏற்கனவே ரசிகர்கள் கடுப்பாகியுள்ள நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் சந்தித்த காயத்துக்கு பின் ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கி 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டான இவர் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டாகி கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினார். அவரது ஆட்டம் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்த நிலையில் அவரை நம்பும் அணி நிர்வாகம் மீண்டும் உலக கோப்பையில் அதுவும் துணை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. எனவே விமர்சனங்களை நிறுத்தி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற பெரிய அழுத்தத்தில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் இவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement