கிரிக்கெட் தவிர்த்து ரிஷப் பண்ட்டுக்கு செட்டாக கூடிய 3 வேலைகள் – வித்யாச பதிவு

Pant
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்குப் பின் இந்தியாவின் அடுத்த தலைமுறை சிறந்த விக்கெட் கீப்பராக தம்மால் விளையாட முடியும் என்று நிரூபித்து வருகிறார். கடந்த 2018இல் அறிமுகமான இவர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் பயமறியாத இளம் கன்றாக சீறிப்பாய்ந்து எதிரணிகளை சிதறடிக்கும் பேட்டிங் செய்யக் கூடியவராக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார். அந்த வகையான அணுகு முறையால் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையும் படைத்துள்ள அவர் காபா போன்ற மறக்க முடியாத சில சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வயதிலேயே மகத்தான சாதனைகளை படைத்துள்ள அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இன்னும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் தம்மால் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் இன்னும் பாராட்டும் அளவுக்கு சாதிக்கவில்லை. ஆனாலும் இன்னும் இளம் வீரராக இருக்கும் அவர் முதிர்ச்சியடைந்து வருவதால் வருங்காலங்களில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது.

- Advertisement -

3 வேலைகள்:
சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய இயற்கையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி காண்பவராக இருக்கும் ரிஷப் பண்ட் தன்னுடைய பேட்டிங் போலவே கலகலப்பான ஜாலியான மனிதராக தோற்றமளிக்கிறார். அந்த வகையில் இன்னும் நீண்டகாலம் விளையாடப் போகும் அவருடைய குணத்தை வைத்து கிரிக்கெட் தவிர்த்து அவருக்கு செட்டாக கூடிய 3 இதர வேலைகளை பற்றி பார்ப்போம்:

3. யூடியூபர்: இந்த நவீன யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்துள்ள சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான யூடியூப் பக்கத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கோடீஸ்வரரானவர்கள் இந்த உலகில் நிறைய பேர் உள்ளனர். பார்ப்பவர்களை கவரும் வித்தை தெரிந்திருந்தால் அதில் வெற்றி பெறுவதற்கு போதும் என்ற நிலைமையில் களத்தில் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய ரிஷப் பண்ட் பொதுவாகவே கலகலப்பாக பேசி ரசிகர்களையும் இதர வீரர்களையும் கவரக் கூடியவராக உள்ளார்.

- Advertisement -

அதிலும் சமூக வலைதளப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்ட தோனியை தன்னுடைய கலகலப்பான குணத்தால் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் கொண்டு வந்த பெருமை இவரைச் சேரும். அந்த வகையில் ஏற்கனவே இந்த துறையில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழகத்தின் அஷ்வினுக்கு பின் இவருக்கு இந்த வேலை கச்சிதமாக பொருந்தும்.

2. ஜிம்னாஸ்ட்: உயரத்தில் சற்று குறைவாக இருப்பதால் எடையில் சற்று அதிகப்படியாக தோற்றமளிக்கும் ரிஷப் பண்ட்டை பிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமீப காலங்களில் சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் இதுவரை பிட்னஸ் என்பது அவருடைய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதியதாக தெரியவில்லை.

- Advertisement -

அதிலும் விக்கெட் கீப்பிங் செய்யும்போது பந்தை தாவிப்பிடித்த பின் சாதாரணமாக எழுந்திருக்காத அவர் சினிமா ஹீரோவைப் போல் படுத்த வாக்கிலேயே தாவி எழுந்திருப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தேவையான பயிற்சிகளை எடுத்து உடலை இன்னும் கொஞ்சம் மெலிக்கும் பட்சத்தில் ஜிம்னாஸ்டிக் துறையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அற்புதமான திறமை இவரது பிறப்பிலேயே இயற்கையாகவே உள்ளது என்று கூறலாம்.

1. பேபி சிட்டர்: கடந்த 2018/19இல் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை யாராலும் மறக்க முடியாது. அந்தத் தொடருக்கு அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் மெல்போர்ன் நகரில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் டிம் பைன் “டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு வீணாகும் உங்களது நேரத்தில் எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஸ்லெட்ஜிங் செய்தார்.

அதற்கு களத்தில் பதிலளிக்காத அவர் நேரடியாக அவருடைய வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவியான போனி பைனை சந்தித்து அவருடைய குழந்தைகளை தனது இடுப்பில் தூக்கி பார்த்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை எப்போதும் மறக்க முடியாது. அத்துடன் தோனி, ரோகித் சர்மா ஆகியோரது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய அவரது புகைப்படங்களையும் மறக்க முடியாது. அந்த வகையில் தெய்வங்களான குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலை இவருக்கு கச்சிதமாக பொருந்தும். ஏனெனில் குழந்தைகளும் இவரைப் பார்த்தால் சிரித்த முகத்துடன் ஒட்டிக்கொள்கிறார்கள்.

Advertisement