இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.
அதோடு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாக உரிமையாளர்களின் கூட்டமானது வரும் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றன. குறிப்பாக மெகா ஏலத்துக்கு முன்னதாக எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? எத்தனை வீரர்களை ரீடெய்ன் செய்யலாம்? என்னென்ன தொகை ஒவ்வொரு அணியும் வைத்திருக்கலாம்? என்பது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பேசப்பட இருக்கின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு உரிமையாளர்கள் தரப்பிலிருந்து ஒரு முக்கிய கோரிக்கை எழுப்பப்பட இருக்கிறது. அதாவது இந்திய வீரர்கள் அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய், 30 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒருவேளை அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கு மூன்று கோடி வரை அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க அனுமதி கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் ஒருமுறை மெகா ஏலத்தின் போது ஒரு வீரர் குறைந்த தொகைக்கு எடுத்து விட்டால் அடுத்த ஏலம் வரை அவர் சிறப்பாக செயல்பட்டாலும் முன்பு எடுத்த அதே அடிப்படை தொகை தான் வழங்கப்படும்.
இதையும் படிங்க : கடமையை செய்ங்க.. பாகிஸ்தான் கொடுக்கும் நல்ல வாய்ப்பை இந்தியா மிஸ் பண்ணக்கூடாது.. சோயப் மாலிக் ஓப்பன்டாக்
அந்த விதிமுறை மாற்றி 30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரர் ஒரு சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டே அவருக்கு சம்பள ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



