ENG vs NZ CWC 2023 : முதல் போட்டியிலேயே பறந்த இந்தியாவின் மானம்.. பிசிசிஐ’க்கு கம்பீர் கேள்வி.. நடந்தது என்ன?

ahmedabad
- Advertisement -

ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் துவங்கியது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் இந்த தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறுவதால் ரசிகர்களிடம் ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் எப்போதுமே சொந்த மண்ணில் எதிரணிகளை தெறிக்க விடக்கூடிய இந்தியா 2011 போல ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஆரம்பம் முதலே பிசிசிஐ நிறைய குளறுபடிகளை செய்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

பறந்த மானம்:
முதலில் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் இருக்கும் மாநில வாரியங்களுடன் விவாதிக்காத பிசிசிஐ தன்னிச்சையாக அட்டவணையை தயாரித்து ஐசிசியிடம் சமர்ப்பித்தது. அதனால் மீண்டும் 2வது முறையாக அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு ரசிகர்கள் படாத பாடுபட்டனர். குறிப்பாக ஆன்லைனில் பல ஆயிரம் முதல் லட்சம் வரை கொடுத்தாலும் பல மணி நேரங்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றங்களே கிடைத்தன.

அந்த சூழ்நிலையில் பொதுவாகவே உலகக்கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்பாக துவக்க விழா நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் நேற்று நடைபெறவிருந்த துவக்க விழா எவ்விதமான காரணமின்றி அறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மதியம் 2.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி துவங்கியது.

- Advertisement -

அதில் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டியை துவக்கினாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இல்லாதது இந்தியாவின் மானத்தை காற்றில் பறக்க வைத்தது. ஆம் பொதுவாகவே உலகக் கோப்பை துவக்க போட்டிக்கு ஒரு இருக்கை கூட மீதம் விடாமல் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிவது வழக்கமாகும். அந்த சூழ்நிலையில் முதல் போட்டியிலேயே ஒரு லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் மைதானம் 10000 ரசிகர்கள் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதையும் படிங்க: அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க.. 2023 உ.கோ பற்றி இந்திய ரசிகர்களுக்கு.. தோனி கலகலப்பான வேண்டுகோள்

அதனால் வர்ணனையாளராக செயல்பட வந்த கௌதம் கம்பீர் ஏமாற்றத்தை சந்தித்து “முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக சொன்னீர்களே” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பிசிசிஐ’யிடம் கேள்வி எழுப்பினார். அதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் இது தான் சமயம் என்று இந்தியாவை கிண்டலடித்து வருகிறார்கள். அதற்கு வெயில் காரணமாக மாலைக்குப்பின் கூட்டம் அதிகரிக்கும் என்று இந்திய ரசிகர்கள் மானத்தை தாங்கி பிடிக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement