2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியை விட 2007 டீம் தான் சிறந்தது – சேவாக் சொல்லும் காரணம் என்ன

- Advertisement -

உலகப் புகழ்பெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் கோப்பைக்காக மோதுவதற்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக 1987, 2011 காலகட்டங்களில் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை இம்முறை தங்களது நாட்டிலேயே நடத்த உள்ளது. அந்த சூழ்நிலையில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011க்குப்பின் கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

worldcup

- Advertisement -

முன்னதாக கடைசியாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து வென்ற இந்தியா சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அந்த அணியில் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜஹீர் கான், முனாப் படேல் போன்ற அனுபவமிக்க வீரர்களுடன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்ரீசாந்த் என இளம் வீரர்களும் இணைந்து தோனி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

2007 உலகக்கோப்பை அணி:
குறிப்பாக யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் முக்கிய நேரத்தில் பந்து வீசி ஆல் ரவுண்டர்களாக வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். அதனால் 10 வருடங்கள் கழித்தாலும் அந்த அணி இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் அந்த அணியை விட அதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி மிகவும் வலுவாக இருந்ததாக அந்த 2 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

குறிப்பாக 2007 உலகக்கோப்பையில் வரலாறு காணாத மோசமான தோல்வியை சந்தித்தாலும் தரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அந்த அணி மிகவும் வலுவானது என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2007 உலகக் கோப்பை மிகவும் கடினமாக அமைந்தது என்றாலும் 2007இல் நாம் கொண்டிருந்த அணி உலகிலேயே மிகவும் சிறந்ததாக இருந்தது. அதற்கு முன் அவ்வளவு வலுவான அணி இந்திய வரலாற்றின் பேப்பரில் இருந்ததில்லை”

- Advertisement -

“மேலும் 2003 உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடி 2011 உலகக் கோப்பை வென்ற அணிகளில் அந்த வருடம் இருந்த வலுவான வீரர்களை போல் தரமானவர்கள் நிறைந்திருக்கவில்லை. ஆனாலும் அந்த உலகக் கோப்பையில் வெறும் 3 போட்டியில் மட்டும் விளையாடிய நாங்கள் வெறும் 1 போட்டியில் அதுவும் பெர்முடாவுக்கு எதிராக வென்று லீக் சுற்றுடன் வெளியேறியதை நினைத்தால் இப்போதும் வலிக்கிறது. அந்த தொடரில் முன்கூட்டியே தோல்வியை சந்தித்ததால் நாடு திரும்புவதற்காக நாங்கள் 2 நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்தோம்”

Sehwag

“அப்போது தோல்வியால் நாங்கள் அனைவரும் அறைக்குள் பூட்டிக்கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருந்த என்னுடைய நண்பர் ஒருவரிடம் ப்ரிசென் பிரேக் எனும் திரைப்படத்தைப் கேட்டு பார்த்து விட்டு 2 நாட்கள் கழித்து நாடு திரும்பினோம்” என்று கூறினார். அவர் கூறுவது போல அந்த உலகக் கோப்பையில் சச்சின் கங்குலி, டிராவிட், சேவாக், கம்பீர், தோனி, யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என மகத்தான வீரர்களுடன் இந்தியா களமிறங்கியதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

இதையும் படிங்க:IPL 2023 : ஐ.பி.எல் பைனல் முடிந்ததும் பரிசளிப்பு விழாவில் கூட கலந்து கொள்ளாமல் இரவோடு இரவாக பறந்த வீரர் பற்றி தெரியுமா?

இருப்பினும் கிரேக் சேப்பல் குட்டையை குழப்பியதை போல் பேட்டிங் வரிசையை மாற்றியதால் கத்துக்குட்டி வங்கதேசத்திலும் தோற்ற இந்தியா பெர்முடாவுக்கு எதிராக 412 ரன்கள் விளாசி சாதனை வெற்றி பெற்றாலும் வாழ்வா – சாவா போட்டியில் இலங்கையிடம் தோற்று வெளியேறியது. அந்த தோல்வியை இப்போதும் இந்திய ரசிகர்கள் நினைத்து கூட பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement