இன்னும் 5 வருடத்துக்குள் ஐ.பி.எல் தொடரில் இந்த விஷயம் மாறும். நீங்க வேணா பாருங்க – முன்னாள் வீரர் உறுதி

IPL 2022
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கடந்த 2 மாதங்களாக த்ரில்லர் நிறைந்த போட்டிகளுடன் பரபரப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2022 தொடர் பிரியாத மனதுடன் விடை பெற்றுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை ஏறக்குறைய தினம்தோறும் ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த தொடரில் இம்முறை 10 அணிகள் விளையாடியதால் கோப்பையை வெல்வதற்கு இருமடங்கு போட்டி நிலவியது. அதில் சென்னை, மும்பை போன்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் தொடர் தோல்விகளால் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

இருப்பினும் நேற்று முளைத்த காளான்களாக குஜராத், லக்னோ ஆகிய ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தின. இறுதியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி 13 வருடங்கள் கழித்து பைனலுக்கு வந்த ராஜஸ்தானை சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் தோற்கடித்த குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

தரமில்லா சர்வதேச டி20:
அப்படி 2 மாதங்களுக்கு மேலாக பரபரப்பான போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் தொடரை பார்த்துவிட்டு விரைவில் துவங்கும் சர்வதேச டி20 போட்டிகளை பார்த்தால் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் அமைகிறது. ஏனெனில் சர்வதேச டி20 போட்டிகளில் பெரும்பாலும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளை தவிர இதர அணிகள் மோதும் போது அதில் ஒரு அணி பலவீனமாக இருப்பதால் அப்போட்டிகள் தரமில்லாமல் ஒருதலைபட்சமாக அமைகிறது. எடுத்துக்காட்டாக சமீபத்தில் இந்திய மண்ணில் நடந்த இந்தியா – இலங்கை, இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் போன்ற தொடர்களை கூறலாம்.

INDvsWI

எனவே தரமில்லாத சர்வதேச டி20 போட்டிகளை உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக கருதப்படும் கால்பந்தை போல உலக கோப்பையில் மட்டும் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தி விட்டு எஞ்சிய தருணங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா போன்றவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். அப்படி செய்தால் சர்வதேச டி20 போட்டிகளும் தரமாக அமையும், ரசிகர்களுக்கு விருந்தாக ஐபிஎல் தொடர் கிடைக்கும், வாரியங்களுக்கும் பணமும் இரு மடங்கு கிடைக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

- Advertisement -

2 ஐபிஎல்:
இந்நிலையில் ஏற்கனவே கூறியது போல வருடத்திற்கு 2 ஐபிஎல் என்ற நிலைமை கூடிய விரைவில் குறிப்பாக அடுத்த 5 வருடத்திற்குள் வரப்போவது 100% உறுதி என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா மீண்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் மீண்டும் அவர் பேசியது பின்வருமாறு. “இது பற்றி நீங்கள் பேசும்போது 2 ஐபிஎல் தேவைப்படுவதாக உணர்வீர்கள். அது தேவையா இல்லையா என்பதும் முக்கியமல்ல. அது நடக்குமா அல்லது நடக்காதா? என்பது மிகப்பெரிய கேள்வி. ஆனால் அது நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் அது தற்போது நடைபெறாது. சரியான தருணத்தில் நிச்சயம் நடைபெறும். ஒருவேளை அடுத்த 5 வருடத்திற்குள் நடைபெறவில்லை என்றால் நிச்சயமாக அதற்கடுத்த 5 வருடத்திற்குள் நடைபெறும். அது 100% நிச்சயம் நடக்கப்போகிறது”

Aakash Chopra

“அதில் 94 போட்டிகள் கொண்ட ஒரு பெரிய ஐபிஎல் தொடரும் ஒரு மாத காலத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 1 முறை மட்டும் மோதக் கூடிய சிறிய ஐபிஎல் தொடரும் நடக்கப் போகிறது. அதற்காக உங்கள் கைகளில் இருந்து விதைகளை விதைத்து சில நாட்களுக்கு தண்ணீர் கொடுத்தால் அதன்பின் அது தாமாக வளர்ந்த ஆலமரமாக மாறலாம். அதுவே ஐபிஎல் போன்ற ஒரு தொடரின் இயற்கையான பரிணாம வளர்ச்சியாகும்” என்று கூறினார்.

- Advertisement -

கடந்த 2008இல் 8 அணிகளுடன் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் 2011இல் 10 அணிகளுடன் விரிவு படுத்தப்பட்டாலும் அடுத்த சில வருடங்களில் கலைக்கப்பட்டது. அதன்பின் தற்போது மீண்டும் 10 அணிகளுடன் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 60 நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் தற்போது 74 நாட்களாக விரிவடைந்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி சர்வதேச டி20 போட்டிகளை பாதிப்பதாக ஐசிசி சேர்மன் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Chopra

இருப்பினும் ஐபிஎல் தொடரின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறும் ஆகாஷ் சோப்ரா அடுத்த 5 வருடங்களில் 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் மற்றும் 40 – 45 நாட்களுக்குள் நடைபெறும் சிறிய ஐபிஎல் தொடர் என வருடத்துக்கு 2 தொடர் நடைபெறப்போவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு நினைக்கல – மிட்சல் மார்ஷ் வருத்தம்

ஏற்கனவே ஐபிஎல் தொடரால் ஐசிசிக்கு சர்வதேச டி20 போட்டிகளை நடத்துவதால் கிடைக்கும் பணத்தை விட அதிக பணம் கிடைப்பதால் ஆகாஷ் சோப்ரா கூறுவதுபோல் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

Advertisement