அந்த மேட்ச்ல இருந்துதான் என்னுடைய பெரிய கேரியருக்கான நம்பிக்கை வந்துச்சு – பழைய நினைவை பகிரும் விராட் கோலி 

Kohli
- Advertisement -

ஆகஸ்ட் 27 தேதியன்று ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க 2022 ஆசிய கோப்பை கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 15 ஆவது முறையாக நடைபெறும் இந்த கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு ஈடாக இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் சூப்பர் ஸ்டார் வீரரான அவரை 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் பெரிய ரன்களை அடிக்காமல் விளையாட முடியும் என்ற வகையில் நிறைய விமர்சகர்கள் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்துள்ளனர்.

இருப்பினும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரைப் போலவே அவரது இடத்தில் ரன் மெஷினாக கடந்த 10 வருடங்களாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் இப்போதே ஜாம்பவானுக்கு நிகரான சாதனைகளை படைத்துள்ளார். அந்தளவுக்கு ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தனித்துவமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் இந்த சோதனை காலங்களிலும் இடையிடையே 40, 70 போன்ற நல்ல ரன்களைக் குவித்து வருகிறார்.

- Advertisement -

நட்சத்திர கேரியர்:
அதனால் 2019க்குப்பின் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களில் இடம்பிடித்துள்ள அவரை சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அனைவரும் பார்ம் அவுட்டாகி விட்டதாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அவரது தரத்தை நிறைய இந்திய முன்னாள் வீரர்கள் உணரவில்லை என்றாலும் மகிளா ஜெயவர்தனே, பிரைன் லாரா போன்ற வெளிநாட்டவர்கள் உணர்ந்து விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை கொடுக்கின்றனர்.

சொல்லப்போனால் 33 வயதிலேயே வரலாற்றில் விளையாடிய நிறைய ஜாம்பவான் வீரர்களால் தொடமுடியாத 70 சதங்களை அடித்துள்ள விராட் கோலி சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜாம்பவான்களின் பட்டியலில் ஜாம்பவனாக ஜொலிக்கிறார். வரலாற்றில் சச்சின் போன்றவர்களும் இது போன்ற தருணங்களை சந்தித்துள்ளார்கள் என்ற நிலைமையில் அவரும் இதிலிருந்து மீண்டெழுந்து நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம். எது எப்படி இருந்தாலும் இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய கேரியரை உருவாக்கி ஜாம்பவானாக நிற்கும் விராட் கோலி அறிமுகமான ஆரம்ப காலங்களில் மிகவும் தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

- Advertisement -

தன்னம்பிக்கை 183:
இந்நிலையில் கடந்த 2012இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 330 ரன்களை துரத்திய போது மிகச் சிறப்பாக செயல்பட்டு விளாசிய 183 ரன்கள் இன்னிங்ஸ் தான் தம்மால் பெரிய கேரியரை உருவாக்கி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல் முறையாக கொடுத்ததாக விராட் கோலி கூறியுள்ளார். நவீன ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை குவித்து ஜாம்பவானாக திகழும் அவர் அந்தப் போட்டியில் தான் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். அந்த மறக்க முடியாத இன்னிங்ஸ் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஆசிய கோப்பை எப்போதுமே என்னுடைய நினைவில் நீங்காதது. அதிலும் என்னைப் பொறுத்தவரை அந்த 183 ரன்கள் முக்கியமானது. ஏனெனில் அந்த இன்னிங்ஸ் தான் என்னை பற்றி முழுமையாக எனக்கே தெரியப்படுத்தியது. 23 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான மிகப்பெரிய போட்டியில் அதுவும் சேசிங் செய்யும் போது அந்த மாதிரியான இன்னிங்சை நான் விளையாடியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது”

“அந்தத் தருணத்திலிருந்து தான் என்னுடைய தன்னம்பிக்கை மேலும் மேலும் பன்மடங்கு வளர்ந்தது. அதேபோல் வங்கதேசத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு ஒரு போட்டியில் கடினமான பிட்ச்சில் 49 ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றியது என்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இன்னிங்ஸ் ஆகும். மிகவும் ஸ்பெஷலான இந்த 2 இன்னிங்ஸை என்னுடைய நினைவில் எப்போதும் நிலைத்திருக்கிறது” என்று கூறினார்.

அதேபோல் இந்த ஆசிய கோப்பையில் 6 அணிகள் மோதினாலும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு மட்டும் தனியான பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதைப்பற்றி விராட் கோலி மேலும் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய தொடரில் நாங்கள் விளையாடும் போது வெளியிலிருந்து தேவையற்ற அழுத்தங்கள் உருவாக்கப்படுவதை எங்களால் தவிர்க்க முடிவதில்லை. இருப்பினும் ஒரு வீரராக ஏற்கனவே நான் பலமுறை கூறியுள்ளது போல் மற்ற போட்டிகளை போல இதையும் ஒரு சாதாரண போட்டியாக நினைத்தே களமிறங்குவேன். வெளியில் இருப்பவர்கள் உங்களை அதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு இழுக்கலாம். ஆனால் அது களத்தில் போட்டி நடைபெறும் வரை மட்டுமே நீடித்திருக்கும். இது காலம் காலமாக வழக்கமாக நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

Advertisement