2022 ஐசிசி டி20 உ.கோ தொடரில் முதல் முறையாக விளையாடும் 10 இளம் வீரர்களின் பட்டியல்

Deepak Hooda
- Advertisement -

வரலாற்றின் 9வது ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. என்னதான் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்கள் உலகம் முழுவதிலும் நடைபெற்றாலும் 20 ஓவர் போட்டிகளின் உலக சாம்பியனை தீர்மானிக்கும் இந்த டி20 உலகக் கோப்பைக்கு 2007 முதல் இப்போது வரை தனித்துவமான மவுசு உள்ளது. இந்த வருடம் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க விளையாடும் நிலையில் அதற்கு போட்டியாக இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் இத்தொடரில் களமிறங்குகின்றன.

இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணியிலும் ஆரோன் பின்ச் முதல் ரோகித் சர்மா வரை மூத்த வீரர்களும் ஏற்கனவே விளையாடி நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர்களும் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்ல போட்டி போட உள்ளனர். இருப்பினும் நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் சமீப காலங்களில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் தங்களுடைய கேரியரில் முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள். அவர்களை பற்றி பார்ப்போம் (முழு அந்தஸ்த்து பெற்ற அணிகளிலிருந்து):

- Advertisement -

10. திரிஷ்டன் ஸ்டப்ஸ்: உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வான 22 வயதாகும் இவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவுக்காக அறிமுகமானார்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 119 ரன்களை 216.36 என்ற ஸ்டிரைக் ரேட்டில் பயமறியாத காளையாக வெளுத்து வாங்கும் பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப் படுத்தியுள்ளத்தால் இப்போத இவர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

9. ஹரி ப்ரூக்: இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் 2125 ரன்களை 149.33 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்ததால் 23 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள இவர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த உலக கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜானி பேர்ஸ்டோ காயத்தால் வெளியேறியதால் அவருடைய இடத்தில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

8. மொசாதிக் ஹொசைன்: 2022 ஆசிய கோப்பையில் அசத்தலாக செயல்பட்ட இவர் இதுவரை 23 போட்டிகளில் 310 ரன்களையும் 14 விக்கெட்டுகளையும் எடுத்து வங்கதேசத்தின் இளம் ஆல்-ரவுண்டராக இந்த உலக கோப்பையில் விளையாட உள்ளார்.

- Advertisement -

7. நசீம் ஷா: ஷாஹீன் அப்ரிடிக்கு பதில் சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான இவர் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்ற வகையில் அற்புதமாக பந்து வீசினார்.

குறிப்பாக வலியுடன் வெற்றிக்கு போராடிய இவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் உலக கோப்பையிலும் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

6. பிலிப் சால்ட்: 26 வயதாகும் இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 3640 ரன்களை 158 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து திறமையை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்துக்காக இந்த உலக கோப்பையில் முதல் முறையாக விளையாட உள்ளார். இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் பேக்-அப் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார்.

5. எபோதத் ஹொசைன்: இந்த வருடம் வங்கதேசத்துக்காக அறிமுகமான இவர் இதுவரை ஒரு போட்டியில் விளையாடி 4 ஓவர்களை வீசி 57 ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்து மண்ணில் பதிவு செய்த வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் அந்த அணியின் அடுத்த தலைமுறை பவுலராக இந்த உலக கோப்பையில் விளையாட உள்ளார்.

4. டிம் டேவிட்: சிங்கப்பூருக்காக விளையாடி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி சமீப காலங்களில் பிக்பேஷ், ஐபிஎல் போன்ற தொடர்களில் அதிரடி ஆல்-ரவுண்டராக விளையாடி வரும் இவர் முதல் முறையாக சொந்த மண்ணில் இந்த உலக கோப்பையில் களமிறங்குகிறார்.

இதற்கு முன் சிங்கப்பூருக்காக 14 சர்வதேச போட்டிகளில் 558 ரன்களை 158.52 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள இவர் இந்த தொடரில் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராக பார்க்கப்படுகிறார்.

3. அர்ஷிதீப் சிங்: சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய இவர் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் சிறந்த டெத் பவுலராக அறியப்படுகிறார்.

23 வயதுடன் தனித்துவமான இடதுகை பந்து வீச்சாளரான இவர் இதுவரை 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 7.38 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து உலக கோப்பையில் தேர்வாகும் அளவுக்கு ஆரம்பத்திலேயே அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

2. ஹர்ஷல் படேல்: 2021 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று அறிமுகமான இவர் இந்த உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் களமிறங்கும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். இதுவரை 17 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்து வீசக்கூடியவராக அறியப்படுகிறார்.

1. தீபக் ஹூடா: உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்காக அறிமுகமாகி சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ள இவர் ஜடேஜாவுக்கு பதில் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் களமிறங்கிய அத்தனை போட்டிகளிலும் வென்றதால் உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் இதுவரை 12 போட்டிகளில் 293 ரன்களை 155.85 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

Advertisement