எப்போதும் சரியாக கணிக்க முடியாத கிரிக்கெட் விளையாட்டில் அவ்வப்போது வினோதமான நிகழ்வுகளும் அரிய சாதனைகளும் நிகழ்த்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது ரசிகர்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வினோதத்தை ஐக்கிய அரபு நாடுகள் மகளிரணி அரங்கேற்றியுள்ளது. அதாவது 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது.
அதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றன. அதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்று பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த சுற்றில் மே 10ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் கத்தார் அணிகள் மோதிய போட்டி டெர்ட்தாய் மைதானத்தில் நடைபெற்றது.
10 ரிட்டையர்ட் அவுட்:
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் அடித்தது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீராங்கனை மற்றும் கேப்டன் ரோகித் ஓசா சுமாராக பவுலிங் செய்த கத்தார் பவுலர்களை அடித்து நொறுக்கி சதத்தை அடிக்க 113* (55) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய தீர்த்தா சதிஷ் 74* (42) ரன்கள் அடிக்கும் மிரட்டினார்.
அதனால் 16 ஓவரில் அமீரகம் 192/0 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. அப்போது மழை வருவது போன்ற சூழ்நிலை நிலவியதால் போட்டி ரத்தாகும் அபாயம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் அமீரகம் தங்களுடைய ஆட்டத்தை முடித்துக் கொள்ள விரும்பியது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை போல டி20 போட்டிகளில் டிக்ளேர் செய்ய முடியாது.
வினோத வெற்றி:
எனவே தங்களுடைய அனைத்து வீராங்கனைகளையும் ரிட்டையர்டு அவுட் முறையில் அமீரகம் அணி அவுட்டாக்க முடிவெடுத்தது. அதன்படி களத்தில் இருந்த முதல் 2 வீராங்கனைகள் தாங்கள் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறுவதாக நடுவர்களிடம் அறிவித்து விட்டு சென்றனர். அதே போல எஞ்சிய 8 வீராங்கனைகளும் தலா 2 பேர் கொண்ட ஜோடியாக வெள்ளைக்கோட்டுக்கு வந்ததும் ரிட்டையர்டு அவுட்டாகி செல்வதாக தெரிவித்து விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க: ஒரே அழைப்பில் அமீரகத்தை கைக்குள் போட்டு.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தானுக்கு ஆப்படித்த ஜெய் ஷா
அதனால் 16 ஓவரில் 192க்கு ஆல் அவுட்டான அமீரகம் அணிக்கு 8 வீராங்கனைகள் 0 ரன்களை பதிவு செய்தனர். அடுத்து விளையாடிய கத்தார் அணியை வெறும் 11.1 ஓவரில் ஆல் அவுட் செய்த அமீரகம் 163 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் நினைத்தது போலவே 4 புள்ளிகளை பெற்ற அந்த அணி குரூப் சுற்றில் டாப் இடத்தைப் பிடித்து அசத்தியது. ஆனால் அந்த அணி நிகழ்த்திய இந்த வினோத சம்பவம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.