வெளிநாடுகளுக்கு சென்றதால் 2022 ஆசிய கோப்பையில் விளையாடாமல் போன 10 ஆசிய வீரர்களின் பட்டியல்

Tim-David
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடும் ஆசிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு தங்களது திறமையை வெளிப்படுத்தி போராடுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளை மிஞ்சும் அளவுக்கு தரமான வீரர்களை உருவாக்கி வரும் ஆசிய அணிகளுக்காக இம்முறையும் நிறைய தரமான வீரர்கள் வெற்றிக்காக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் விதியின் வலிமையால் வரலாற்றில் அயர்லாந்தைச் சேர்ந்த இயன் மோர்கன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து உலக கோப்பையை வென்று கொடுத்தது போல் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சில வீரர்கள் சமீப காலங்களில் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதால் தங்களது நாட்டுக்காக இந்த தொடரில் விளையாடவில்லை. அதுபோன்ற முக்கிய வீரர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

- Advertisement -

1. டிம் டேவிட்: டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்படும் இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர். அந்த அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 558 ரன்களை 46.5 என்ற நல்ல சராசரியில் 158 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் இந்த ஆசிய கோப்பையின் முதன்மை சுற்றில் விளையாடுவதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் விளையாடிய சிங்கப்பூர் அணியில் அவர் விளையாடவில்லை.

- Advertisement -

2. மார்க் சாப்மேன்: இந்த ஆசிய கோப்பையில் இந்தியா தனது 2வது லீக் போட்டியில் எதிர்கொண்ட ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த இவர் 2015இல் அந்த அணிக்காக அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.

ஆனால் அடுத்த சில வருடங்களில் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த இவர் அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2018 முதல் அந்நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதனால் இந்த ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்காக இவர் விளையாடவில்லை.

- Advertisement -

3. ஸ்னேகன் ஜெயசூரியா: இலங்கையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான இவர் 2015இல் நாட்டுக்காக அறிமுகமாகி 12 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடினார். கடையாக கடந்த 2020இல் விளையாடியிருந்த அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்துள்ளதால் அந்நாட்டுக்காக விளையாட முயற்சிக்கும் நிலையில் இந்த ஆசிய கோப்பையில் இலங்கைக்காக விளையாடவில்லை.

4. அனுஷ்மான் ராத்: ஹாங்காங்கை சேர்ந்த இவர் கடந்த 2014இல் அறிமுகமாகி 2018 வரை நாட்டுக்காக விளையாடினார். கடைசியாக கடந்த 2018 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியிருந்த இவர் அதன்பின் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து 2021இல் ரஞ்சி கோப்பையில் ஒடிசா அணிக்காக விளையாடினார். அதனால் இம்முறை ஆசிய கோப்பையில் பங்கேற்கும் ஹாங்காங் அணியில் இவர் இடம் பெறவில்லை.

- Advertisement -

5. இஜட்துள்ள தொவ்ல்த்சாய்: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் கடந்த 2010இல் கென்யாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி 2012இல் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் தனது நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் 2014இல் சந்தித்த காயத்தால் வாய்ப்புகளை இழந்த அவர் அதன்பின் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து நாட்டுக்காக 2020 வரை விளையாடினார்.

6. சமி அஸ்லாம்: பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் 2015இல் நாட்டுக்காக அறிமுகமாகி 13 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இருப்பினும் அதில் சுமாராக செயல்பட்ட அவர் கடைசியாக கடந்த 2017இல் பாகிஸ்தானுக்காக விளையாடிய நிலையில் அதன்பின் ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடி பெயர்ந்து விட்டதால் ஆசிய கோப்பைகளில் பங்கேற்கவில்லை.

7. அமிலா அபோன்சா: இலங்கையைச் சேர்ந்த இவர் கடந்த 2016இல் அந்நாட்டுக்காக அறிமுகமாகி 9 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடினார். கடைசியாக கடந்த 2018 ஆசிய கோப்பையில் இடம் பிடித்திருந்த அவரை தொடர்ந்து சிறப்பாக செயல்பட தவறியதால் அந்நாட்டு வாரியம் நீக்கியது. அதன்பின் அமெரிக்காவுக்கு அவர் குடிபெயர்ந்து விட்டதால் தற்போதைய ஆசிய கோப்பையில் விளையாடவில்லை.

8. உன்முக்ட் சந்த்: 2012 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த இவர் பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்பின் ஐபிஎல், ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறினார். அதனால் டெல்லி அணிக்காக விளையாடும் வாய்ப்பை கூட இழந்த அவர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து 2024 முதல அந்நாட்டுக்காக விளையாட தயாராகி வருகிறார்.

9. சமித் பட்டேல்: அதே 2012 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விளையாடிய இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் குஜராத், பரோடா, கோவா போன்ற அணிக்கு விளையாடினார். இருப்பினும் அதில் சுமாராக செயல்பட்டதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறாத இவரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கு விளையாட முயற்சித்து வருகிறார்.

10. ஹர்மீட் சிங்: 2012 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளராக அசத்திய இவர் 2013இல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். இருப்பினும் சுமாராக செயல்பட்டதால் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறாத இவரும் அமெரிக்காவில் விளையாட முயற்சிக்கும் இந்திய வீரர்களில் ஒருவராகியுள்ளார்.

Advertisement