த்ரில் வெற்றி பின்னனியில் பாகிஸ்தான் செய்த மிஸ்டர்.பீன் துரோகம், கலாய்த்த சேவாக் – பழி தீர்த்து கொண்டாடும் ஜிம்பாப்வே (வீடியோ)

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் அவமான தோல்வியை சந்தித்தது. அதனால் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்கியது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 130/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 (28) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 131 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேப்டன் பாபர் அசாம் 4 (9) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரில் முகமது ரிஸ்வானும் தடுமாறி 14 (16) ரன்களில் அவுட்டாகி சென்றார். அப்போது களமிறங்கிய இப்திகார் அகமது 5 (10) ரன்களில் அவுட்டானதால் 36/3 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு ஒருபுறம் ஷான் மசூட் நங்கூரமாக நின்றார். ஆனால் அவருக்கு கை கொடுக்க முயன்ற சடாப் கானை 17 (14) ரன்களில் காலி செய்த சிக்கந்தர் ராசா அடுத்த பந்தில் ஹைதர் அலியை டக் அவுட் செய்து மிரட்டினார்.

- Advertisement -

பாகிஸ்தானின் துரோகம்:
அப்போது போராடிய ஷான் மசூட் 44 (38) ரன்கள் அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ப்ராட் எவன்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் 3 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் முகமது வாசிம் பவுண்டரி அடித்து 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். ஆனால் 4வது பந்தில் ரன் எடுக்க தவறிய முகமது நவாஸ் 5வது பந்தில் 22 (18) ரன்களில் அவுட்டானதால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது அடுத்து களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனால் 20 ஓவரில் பாகிஸ்தான் 129/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்து ஜிம்பாவே மாஸ் காட்டியது.

அதை விட பாகிஸ்தான் செய்த நம்பிக்கை துரோகத்துக்கும் ஜிம்பாப்வே பழி தீர்த்தது. ஆம் இப்போட்டிக்காக பயிற்சிகளை துவங்கிய பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்களை அந்நாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதை பார்த்த ஒரு ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர் “ஒருமுறை உலகப் புகழ்பெற்ற மிஸ்டர் பீன் எனப்படும் மிஸ்டர் பீன் ரோவனை காட்டுவதாக எங்களுக்கு சத்தியம் செய்து ஏமாற்றியதை நாங்கள் மறக்க மாட்டோம். அதற்கு நாளைய போட்டியில் பதிலடி கொடுப்போம். வேண்டுமானால் மழை வந்து காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்தது வைரலானது. அவரது கருத்தால் 2016இல் நடந்த பெரிய துரோகமும் அம்பலமாகியது.

- Advertisement -

ஆம் 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே நாட்டில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மிஸ்டர் பீன் எனப்படும் ரோவன் அட்கின்ஷன் அனுப்புவதாக உறுதியளித்த பாகிஸ்தான் அவரைப் போலவே இருக்கும் தங்களது நாட்டைச் சேர்ந்த முகமது ஆசிப் எனப்படும் போலி மிஸ்டர் பீனை அனுப்பியது. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ரோவன் அட்கின்ஷன் போலவே இருந்ததால் அவரை உண்மையான மிஸ்டர் பீன் என்று நம்பிய ஜிம்பாப்வே மக்கள் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து ஹீரோவாக கொண்டாடினார்கள். அத்துடன் ஜிம்பாப்வே அரசும் அவருக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்து சாலையில் பவனி வர வைத்து கொண்டாடியதுடன் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவதற்காக அதிகப்படியான பணத்தையும் கொடுத்தது.

ஆரம்பத்தில் அது தெரியாத நிலையில் நாட்கள் செல்ல செல்ல சமூக வலைதளங்களின் வாயிலாக அவர் உண்மையான மிஸ்டர் பீன் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஜிம்பாப்வே மக்கள் அப்போது முதலே காட்டத்துடன் இருந்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் இந்த உண்மையை அம்பலப்படுத்திய நிலையில் அதற்காக மன்னிக்குமாறு சில பாகிஸ்தான் ரசிகர்கள் பதிலளித்தனர்.

இருப்பினும் இந்த விவகாரம் வைரலான நிலையில் அவர் சவால் விடுத்தது போலவே இறுதியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஜிம்பாவே மாஸ் வெற்றியை பதிவு செய்த போது அந்நாட்டில் இருந்த மக்கள் அதை துள்ளி குதித்துக் கொண்டாடிய வீடியோவை அந்நாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது. மொத்தத்தில் இப்படி ஒரு மட்டமான வேலையை செய்ததற்கு 6 வருடங்கள் கழித்து தோல்வியை பரிசளிக்கப்பெற்ற பாகிஸ்தானை வீரேந்திர சேவாக் உட்பட முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் கலாய்த்து தள்ளுகின்றனர்.

Advertisement