ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இணை உறுப்பு அணிகளுக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. அதில் ஆப்பிரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்று ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் நடைபெறுகிறது. அத்தொடரில் கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது அரையிறுதிப் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி ஹராரேவில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கென்யா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கென்யா 20 ஓவரில் தடுமாற்றமாக விளையாடி 122/6 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ராக்கேப் பட்டேல் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக பிளசிங் முசரபாணி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஒரே ஓவரில் 6 பவுண்டரி:
அடுத்ததாக விளையாடிய ஜிம்பாவே அணிக்கு பிரையன் பெனட் – மருமணி ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினர். குறிப்பாக எல்என் ஒலுச் வீசிய 4வது ஓவரில் பிரைன் பென்னெட் அடுத்ததடுத்த ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்தார். அதோடு நிற்காத அவர் கடைசி 3 பந்துகளிலும் பவுண்டரிகளை பறக்க விட்டு 4, 4, 4, 4, 4, 4 என ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்தார்.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பெனட் படைத்துள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். ஆனால் பென்னெட் போன்று வேறு எந்த வீரரும் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்ததில்லை.
ஜிம்பாப்வே தகுதி:
அந்த வகையில் அதிரடியாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 (25) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய மருமணி தம்முடைய பங்கிற்கு 39 (27) ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா 10 (15) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் ரியன் புர்ல் 16* (15), டோனி முன்யோங்கா 3* (5) ரன்கள் எடுத்த உதவியுடன் 15 ஓவரில் 123/5 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: 3 முறை 3 சதம்.. வெ.இண்டீஸை பந்தாடிய ராகுல், ஜடேஜா, ஜுரேல்.. 2007க்குப்பின் இந்தியா அரிதான சாதனை
அதனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஜிம்பாப்வே 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றது. ஏனெனில் ஆப்பிரிக்கா கண்டத்தின் தகுதி சுற்றில் இறுதிப்போட்டியில் விளையாடும் 2 அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்பது விதிமுறையாகும். மறுபுறம் வ்ராஜ் பட்டேல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோற்றக் கென்யா தொடரிலிருந்து வெளியேறியது.



