
இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் ஜிம்பாப்வே தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை வென்ற நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி ஹராரே நகரில் இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்குத் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு குசால் மெண்டிஸ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் தடுமாறிய நிசாங்கா 8 (8) ரன்னில் செவிலியன் திரும்பினார். அதைத்தொடர்ந்து வந்த பெர்னாண்டோ ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதனால் 24/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இலங்கைக்கு கமில் மிஸ்ரா 20 (20), கமிண்டு மெண்டிஸ் 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை உண்டாக்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அசலங்கா 18 (23), முன்னாள் கேப்டன் சனாக்கா 15 (21) ரன்னில் அவுட்டாகி நடையைக் கட்டினார்கள். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார்கள்.
அதனால் 17.4 ஓவரில் இலங்கையை 80 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஜிம்பாப்வே இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிளசிங் முஸர்பானி 2, கேப்டன் சிகந்தர் ராசா 3, பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். மேலும் இலங்கையை முதல் முறையாக 100 ரன்களுக்குள் சுருட்டி ஜிம்பாப்வே சாதனை படைத்துள்ளது.
மறுபுறம் கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இலங்கை 100 ரன்களை கூட அடிக்க முடியாமல் ஆல் அவுட்டாகி அவமான சாதனையைப் படைத்துள்ளது. அத்துடன் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இலங்கை தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரின் பைனலில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
இதற்கு முன் 2024 கொழும்பு டி20 போட்டியில் 144/7 ரன்கள் அடித்ததே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோராகும். இது போக ஒட்டுமொத்தமாக இலங்கை தங்களுடைய 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் 77 ரன்களுக்கு சுருண்டதே இலங்கையின் முதல் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பாமல் வெற்றி பெறும் நோக்கத்துடன் ஜிம்பாப்வே விளையாடி வருகிறது.