ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 24ஆம் தேதி புலவாயோ நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே போராடி 40.2 ஓவரில் 205 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக மருமணி 29, நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசா 39, ரிச்சர்ட் 48 ரன்கள் குவித்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஆகா சல்மான், ஃபைசல் அக்ரம் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதை அடுத்து பாகிஸ்தான் அணி 206 ரன்களை சேசிங் செய்தது.
பாகிஸ்தான் பரிதாபம்:
அந்த ஆட்டத்தில் துவக்க வீரர்கள் சாய்ம் ஆயுப் 11, அப்துல்லா ஷபிக் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதே போல அடுத்து வந்த கம்ரான் குலாம் 17, ஆகா சல்மான் 4, ஹசிபுல்லா கான் 0, இர்ஃபான் கான் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தார்கள். அதனால் 60-6 என பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது.
அப்போது கேப்டன் முகமது ரிஸ்வான் நங்கூரமாக விளையாடி 19 (43)* ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய போது மழை குறுக்கே வந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை போட்டியை ரத்து செய்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி ஜிம்பாப்வே அணியை விட பாகிஸ்தான் 80 ரன்கள் பின்தங்கி இருந்தது.
ஜிம்பாப்வே வெற்றி:
அதன் காரணமாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தார்கள். இதையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே 2 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் வென்று ஜிம்பாப்வே சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: பார்த்து வளர்ந்த மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிரா இதை செஞ்சு சொன்னது மகிழ்ச்சி.. ஜெய்ஸ்வால் பேட்டி
அந்த அணிக்கு சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், பிளசிங் முஸர்பானி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் ஒரு பரிதாபத் தோல்வியை சந்தித்தது.



