இந்தியாவிடம் வாங்கிய அடியில் தெளியாத பாகிஸ்தான் – ஜிம்பாப்வே வரலாற்று மாஸ் த்ரில் வெற்றி, சாத்தியமானது எப்படி

Pak vs ZIM
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் ஒரு கட்டத்தில் கையிலிருந்த வெற்றியை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் கோட்டை விட்டு பரிதாபமாக தோற்றது. அப்படி ஆரம்பத்திலேயே தோல்வியுடன் துவங்கிய அந்த அணி அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற தன்னுடைய 2வது போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்பேவுக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. பெர்த் நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 130/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த கிரிக்கெட் அணிக்கு 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் கிரேக் ஏர்வின் 19 (19) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் மாதேவர் 3 பவுண்டரியுடன் 17 (13) ரன்களில் அவுட்டானார். அதை பயன்படுத்திய பாகிஸ்தான் மிடில் ஆர்டரில் சீன் வில்லியம்ஸ் 31 (28) ரன்கள் எடுத்ததை தவிர ஏனைய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வெற்றிகரமாக பினிஷிங் செய்ய விடாமல் மடக்கி பிடித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது வாசிம் 4 விக்கெட்டுகளையும் சடாப் கான் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

பரபரப்பான வெற்றி:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிரடி காட்டாமல் தடவிய கேப்டன் பாபர் அசாம் 4 (9) ரன்களில் அவுட்டாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக திகழும் முகமது ரிஸ்வான் 14 (16) ரன்களில் தடுமாறி ஆட்டமிழந்தார். அப்போது வந்த இப்திகார் அகமது 5 (10) ரன்களில் நடையை கட்டியதால் 36/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கு எதிராக நின்ற அதே ஷான் மசூட் மீண்டும் நங்கூரமாக நிற்க எதிர்ப்புறம் கை கொடுக்க முயன்ற சடாப் கான் சிக்கந்தர் ராசாவின் 14வது ஓவரில் 17 (14) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதை பயன்படுத்திய சிகந்தர் ராசா அடுத்து வந்த ஹசன் அலியை டக் அவுட் செய்து மிரட்டினார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போராடிய சான் மசூட் 3 பவுண்டரியுடன் 44 (38) ரன்களில் அவுட்டானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கடைசியில் முகமது நவாஸ் அதிரடி காட்டியதால் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ப்ராட் எவன்ஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் முகமது நவாஸ் 3 ரன்களை எடுக்க அடுத்த பந்தில் பவுண்டரி பறக்க விட்ட முகமது வாசிம் 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

- Advertisement -

ஆனால் 4வது பந்தில் ரன் எடுக்காததால் ஏற்பட்ட அழுத்தத்தில் 5வது பந்தில் 22 (12) ரன்களில் முகமது நவாஸ் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்து களமிறங்கிய சாஹின் அப்ரிடி 1 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் 129/8 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் எடுத்ததால் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாவே திரில் வெற்றி பெற்றது. அந்தளவுக்கு அசத்தலாக பந்து வீசிய அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளை சாய்த்து இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பேட்டிங்கில் குறைவான ரன்கள் அடித்திருந்தாலும் முழு நம்பிக்கையுடன் பந்து வீச்சில் போராடிய ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாக்கியது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் மீண்டும் சொதப்பிய பாகிஸ்தான் வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ளது.

அதிலும் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காத அந்த அணி பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 தோல்விகளை பதிவு செய்து நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இப்போதே குறைத்துக் கொண்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே சமயம் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்வோம் என்று ஆரம்பம் முதலே வாய்சாவடால் விட்டு இப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளதால் நிறைய இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement