பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரின் 2வது போட்டி நவம்பர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ராவல்பிண்டியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் போராடி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 162/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரைன் பெனட் 49 (43) ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 47 (32) ரன்கள் விளாசி கை கொடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக ஹஸரங்கா 3, ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தெறிக்க விட்ட ஜிம்பாப்வே:
அடுத்ததாக 163 ரன்களை துரத்திய இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு பதும் நிசாங்கா 0, குஷால் மெண்டிஸ் 6, குசால் பெரேரா 4 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். மிடில் ஆர்டரில் கேப்டன் தசுன் சனாகா பொறுப்புடன் விளையாடி 34 (25) ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். ஆனால் ராஜபக்சா 11, கமிண்டு மெண்டிஸ் 9, ஹஸரங்கா 8 என மற்ற வீரர்கள் யாருமே பெரிய ரன்கள் அடிக்கவில்லை.
டெயில் எண்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி திரும்பி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இறுதியில் 20 ஓவர்களில் இலங்கையை வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி தெறிக்க விட்ட ஜிம்பாப்வே 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த ஜிம்பாப்வே கம்பேக் கொடுத்துள்ளது.
வரலாற்று வெற்றி:
அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டு குல்னா மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 31 ரன்கள் வித்தியாசத்திலும், 2022இல் ஹராரே மைதானத்தில் அயர்லாந்தை 31 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்ததே ஜிம்பாப்பேவின் முந்தையப் பெரிய வெற்றியாகும்.
இதையும் படிங்க: ஆம்ப்ரோஸ் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ
அத்துடன் இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே தங்களுடைய 3வது வெற்றியையும் பெற்றது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக ரிச்சர்ட் ங்கரவா 2, ப்ராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 47 ரன்கள், 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக வெற்றியில் பங்காற்றிய கேப்டன் ராசா ஆட்டநாயகன் விருதை வென்றார்.



