3 விக்கெட்ஸ்.. வங்கதேசத்தை சொந்த மண்ணில் சாய்த்த ஜிம்பாப்வே.. 7 வருடம் கழித்து 2021க்குப்பின் சாதனை வெற்றி

BAN vs ZIM
- Advertisement -

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 20ஆம் தேதி சில்ஹெட் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்தை மிகச்சிறப்பாக பவுலிங் செய்த ஜிம்பாப்வே 191 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

வங்கதேசத்திற்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 56, கேப்டன் சாண்டோ 40, ஜாகிர் அலி 28 ரன்கள் எடுத்தார்கள். ஜிம்பாப்வே அணிக்கு முசரபாணி 3, வெலிங்டன் மசகட்சா 3, நாயூச்சி 2, மாதேவர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

ஜிம்பாப்வே அசத்தல்:

அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை அபாரமாக எதிர்கொண்டு 273 ரன்கள் குவித்து முன்னிலைப் பெற்றது. பிரைன் பெனட் 57, சீன் வில்லியம்ஸ் 59, மயவோ 35 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 5 விக்கெட்டுகளை எடுத்தும் முன்னிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்ததாக விளையாடிய வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் கடினமாகப் போராடியும் 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 60, ஜாகிர் அலி 58, ஹசன் ஜாய் 33, மோனிமுல் ஹைக் 47 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக முசரபாணி 6, வெலிங்டன் மசகட்சா 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்கள்.

- Advertisement -

சாதனை வெற்றி:

இறுதியில் 174 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க வீரர்கள் பிரைன் பெனட் 54, இங்கிலாந்து வீரர் சாம் கரண் தம்பி பென் கரண் 43 ரன்கள் அடித்து ஆரம்பத்திலேயே அபார துவக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் நிக் வெல்ச் 10, சீன் வில்லியம்ஸ் 9, கேப்டன் எர்வின்ஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனாலும் இறுதியில் மாதேவர் 19*, மசகட்சா 12, ரிச்சர்ட் ங்கரவா 4* ரன்கள் எடுத்து கை கொடுத்தனர்.

இதையும் படிங்க: 2025 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடும் வாய்ப்பிருக்கா? – பதிலளித்த காசி விஸ்வநாதன்

அதனால் 174/7 ரன்களை எடுத்த ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் 2021 மார்ச் மாதத்திற்குப் பின் 4 வருடங்கள் கழித்து ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2018க்குப்பின் வங்கதேச மண்ணில் 7 வருடங்கள் கழித்து ஜிம்பாப்வே சாதனை வெற்றியை பெற்றுள்ளது. மறுபுறம் மெஹதி ஹசன் மீண்டும் 5 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் வங்கதேசம் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது.

Advertisement