வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வரும் 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்து 121 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச், ஜோமெல் வேரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ப்ரத்வெய்ட் நங்கூரமாக நின்று 75 ரன்கள் எடுத்ததால் 3வது நாள் முடிவில் 229/5 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருதை வென்று 2வது போட்டியிலும் 57 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.
ஜஹீர் கான் அதிருப்தி:
ஆனால் அவருடன் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற விக்கெட் கீப்பர் இசான் கிசான் முதல் போட்டியில் டிக்ளேர் செய்ய வேண்டிய நேரத்தில் களமிறங்கி முதல் 19 பந்துகளில் சிங்கள் கூட எடுக்காமல் தடவியது கேப்டன் ரோஹித் சர்மாவை கடுப்பாக வைத்தது. அதனால் 20வது பந்தில் அறிமுக போட்டியில் சிங்கிள் எடுத்ததும் அதிரடியாக டிக்ளர் செய்த ரோகித் சர்மா என்னப்பா இப்படி விளையாடுகிறாய் என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அந்த நிலையில் இந்தப் போட்டியில் 341/5 என்ற எந்தவிதமான அழுத்தமற்ற சூழ்நிலையில் களமிறங்கிய அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்றார். அதனால் இம்முறை குறைந்தது தன்னுடைய முதல் அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஜேசன் ஹோல்டர் வீசிய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்தை வம்படியாக சென்று அடிக்க முயற்சித்து மிகப்பெரிய எட்ஜ் வாங்கி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தார்.
இந்நிலையில் ஐபிஎல் உட்பட சமீப காலங்களில் அதிகமாக டி20 போட்டிகளில் விளையாடிய இஷான் கிசான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றாமல் தேவையற்ற அதிரடியான ஷாட்டை தவறான சமயத்தில் தவறாக அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்ததாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ஜஹீர் கான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“அந்த இன்னிங்ஸை அவர் மிகவும் சிறப்பாக துவங்கினார். ஆனால் 30 – 40 பந்துகளை நன்றாக கண்ணில் பார்த்து திறம்பட எதிர்கொண்டு 25 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலான அவர் அப்படி அவுட்டானதால் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்திருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லலாம். இருப்பினும் நீங்கள் இது போல குறிப்பாக இந்த வகையான ஷாட்டை அடித்து அவுட்டானால் நிச்சயமாக ஏமாற்றமாக இருப்பீர்கள்”
இதையும் படிங்க:வீடியோ : தான் அடித்த சிக்ஸரால் தலையில் காயமடைந்த சிறுவனை மைதானத்திற்குள் வரவைத்து ரசல் செய்த காரியம்
“அந்த ஷாட்டில் டி20 அல்லது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் அதை அடித்த அவர் மிகப் பெரிய நல்ல இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பை இழந்தார்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் தொடர் முடிந்ததும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையில் விளையாடுவதற்கு தேர்வு குழுவினர் அழைப்பு விடுத்தும் அதைப் புறக்கணித்த இசான் கிசான் பணிச்சுமையை நிர்வகிக்கிறேன் என்ற பெயரில் ஓய்வெடுத்தார். அப்படி டி20 கிரிக்கெட்டில் விளையாடி விட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதாலயே அவர் இப்படி தடுமாறுவது குறிப்பிடத்தக்கது.