இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போன்று பல்வேறு நாடுகளிலும் தற்போது டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் கிரிக்கெட் குறித்த ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று தற்போது மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது முதல் முறையாக அங்கு நடைபெற்று வருகிறது. இந்த அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில் வாஷிங்டன் பிரீடம் அணியும், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இந்த தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது இந்த போட்டியிலாவது தோல்வியில் இருந்து மீண்டு வருமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 68 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ரைலி ரூஸோ மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரது அதிரடி காரணமாக ஐந்தாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்து அசத்த இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் அணி சார்பாக ரசல் 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எளிதாக துரத்தி அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசல் அடித்த ஒரு பந்து சிக்ஸருக்கு செல்லும்போது அங்கிருந்த ஒரு சிறுவயது ரசிகரின் தலையை பதம் பார்த்தது. இதனால் வலியில் துடித்த அந்த சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு அவரது தந்தை ஐஸ் பேக் ஒத்திரமும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சிறுவன் காயம் அடைந்ததை கேள்விப்பட்ட ரசல் : அந்த சிறுவனை மைதானத்திற்குள் அழைத்து அவரிடம் சிறிது நேரம் பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த சிறுவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அந்த சிறுவன் கையில் கொண்டு வந்த பேட், டி-ஷர்ட், கேப் என அனைத்திலும் தனது ஆட்டோகிராஃபை போட்டு சிறுவனை மகிழ்ச்சி அடைய செய்தார்.
இதையும் படிங்க : IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ் லட்சுமணனின் சாதனையை முறியடித்த – தமிழக வீரர் அஷ்வின்
அதோடு அந்த சிறுவனின் தலையில் முத்தமிட்ட ரசல் மீண்டும் ஒருமுறை அவரிடம் மன்னிப்பு கேட்ட பின்னரே ரசல் அங்கிருந்து நகர்ந்தார். இது குறித்த வீடியோவை லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகமானது வெளியிட்டுள்ளது. ஆண்ட்ரே ரசலின் இந்த செயலானது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.