ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சில அடிப்படை விதிமுறைகளில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக தக்க வைக்கும் வீரர்களை 4க்கு பதிலாக 6 – 8 வரை அதிகரிக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் ஐபிஎல் அணிகள் கோரிக்கை வைத்துள்ளன.
அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்க வேண்டும் என்று டெல்லி போன்ற சில அணிகள் கோரிக்கை வைத்தன. அதை பரிசீலித்து தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். முன்னதாக இம்பேக்ட் வீரர் விதிமுறை வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பின்னடைவை ஏற்படுத்துவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2024 ஐபிஎல் தொடரின் போது கூறியிருந்தார்.
அஸ்வின் கருத்து:
அதே போல விராட் கோலி, டேவிட் மில்லர் போன்ற பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாமல் போயிருந்தால் சிவம் துபே, துருவ் ஜூரேல், சபாஷ் அகமது போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார். எனவே அந்த விதிமுறை தொடரப்பட வேண்டும் என்றும் அஸ்வின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஸ்வின் சொல்வது போல இம்பேக்ட் வீரர் விதிமுறையால் நிறைய இளம் இந்திய வீரர்கள் வாய்ப்பு பெறுவதாக ஜாம்பவான் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். லக்னோ அணியின் புதிய ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இம்பேக்ட் வீரர் விதிமுறை தொடர்பாக நம்மைச் சுற்றி விவாதங்கள் இருக்கிறது”
புதிய வாய்ப்பு:
“ஆனால் நான் அதற்கு ஆதரவு தான் கொடுக்கப் போகிறேன். ஏனெனில் அது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிறைய இளம் இந்திய வீரர்களுக்கான வாய்ப்பைக் கொடுக்கிறது. அவர்களை பல்வேறு அணிகளும் வாங்குவதற்கு விரும்புவதை நீங்கள் மெகா ஏலத்தில் பார்க்க முடியும். அது இந்திய கிரிக்கெட்டை முழுமையாக மாற்றுவதற்கான வாய்ப்பை நீண்ட கால முறையில் ஏற்படுத்துகிறது”
இதையும் படிங்க: ஆர்டிஎம் விதிமுறை இருக்கட்டும்.. ஆனா அவங்களோட சம்மதம் கேட்டுட்டு பண்ணுங்க.. அஸ்வின் கோரிக்கை
“என்ன தான் வலைப்பயிற்சிகளை செய்தாலும் அது களத்தில் நீங்கள் செலவிடும் நேரத்திற்கு நிகராக முடியாது. அது மிகப்பெரிய நேர்மறையாகும். ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை தற்சமயத்தில் பாதி ஆல் ரவுண்டர்களுக்கு இங்கே இடமில்லை. ஏனெனில் இம்பேக்ட் வீரர் விதிமுறை உள்ளது. ஆனால் முழுமையான ஆல் ரவுண்டரை இங்கே யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் எப்போதும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மதிப்பை ஏற்படுத்துவார்கள்” என்று கூறினார்.



