
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களிலும் இந்தியா அடுத்தடுத்து வெற்றி பெற்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியா இப்போதே தயாராகி வருகிறது.
பொதுவாக வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம். அந்த வகையில் இம்முறை ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ் ஆகியோர் ஃபிட்டாக வங்கதேச தொடரில் விளையாடி வருகிறார்கள். அதே போல 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த முகமது ஷமி குணமடைந்து வருவதால் ஆஸ்திரேலிய தொடரில் ஃபிட்டாகி களமிறங்குவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் ஷமி, சிராஜ் ஆகியோருடன் ஆகாஷ் தீப் 3வது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கி இந்தியாவுக்கு வெற்றி பெற்று கொடுக்கும் திறமையை கொண்டுள்ளதாக ஜாம்பவான் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
அப்படியே 2024 துலீப் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் வங்கதேச தொடருக்காக தேர்வான அவர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த சூழ்நிலையில் இது பற்றி ஜஹீர் கான் கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பிளேயிங் லெவனை பற்றி நீங்கள் பேசும் போது உங்களுக்கு 3 வேகபந்து வீச்சாளர்கள் தேவை”
“அதில் ஆகாஷ் தீப் 3வதாக இருப்பார். குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரை பற்றி நாம் பேசும் போது அங்கே ஆகாஷ் தீப் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருப்பதை பார்க்க முடியும். சிராஜ் போலவே அவரும் ஆஃப் ஸ்டம்ப் அல்லது 4வது ஸ்டம்ப்பை அட்டாக் செய்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்தப் பகுதிகளில் நல்ல லென்த்தில் தொடர்ச்சியாக அதிக பந்துகளை வீசுவது மிகவும் முக்கியம்”
இதையும் படிங்க: 4000 நாட்கள்.. பிட்ச் பிரச்சனையில்ல.. பாகிஸ்தான் மாதிரி இதனால தான் இந்தியாவை வீழ்த்த முடியல.. ஷாகிப் பேட்டி
“அதை செய்து வரும் ஆகாஷ் தீப் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவையான ஆக்ரோசத்தையும் காண்பித்துள்ளார். அவருக்கு நல்ல திறமை உள்ளது. எனவே ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைத்தால் தன்னம்பிக்கை அதிகரித்து அவர் அணியின் வெற்றியில் பங்களிப்பார்” என்று கூறினார். இருப்பினும் அனுபவமிக்க ஷமி 3வது பவுலராக தேர்வு செய்யப்படவே வாய்ப்புள்ளது. அதே சமயம் ஆகாஷ் தீப் பேக்-அப் வீரராக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.