வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. அதில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் சமீபத்திய வருடங்களில் விளையாடி வந்த ரிசப் பண்ட் கடந்த வருடம் சந்தித்த காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருந்து வருகிறார்.
அந்த காலகட்டத்தில் சஞ்சு சாம்சன், இஷான் கிசான் ஆகியோர் விக்கெட் கீப்பராக விளையாடினர். இருப்பினும் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் ஜிதேஷ் சர்மா தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபித்தார். அதே போல 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுலும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
சான்ஸ் கடினம்:
ஆனால் ராகுல் சமீபத்திய ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. அதே போல ஜித்தேஷ் சர்மாவும் இன்னும் முழுமையாக தன்னுடைய திறமையை நிரூபிக்கவில்லை. மறுபுறம் 90% குணமடைந்துள்ள ரிசப் பண்ட் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை முழுமையாக குணமடைந்து ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
சொல்லப்போனால் மேட்ச் வின்னரான ரிஷப் பண்ட் குணமடைந்து விட்டால் நேரடியாக உலகக் கோப்பையில் விளையாட தேர்வு செய்யுங்கள் என்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மிகப்பெரிய விபத்திலிருந்து குணமடைந்து வரும் ரிசப் பண்ட் இன்னும் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே இருப்பதாக ஜகீர் கான் தெரிவித்துள்ளார்.
எனவே ஐபிஎல் தொடரில் அசத்தினாலும் அவருக்கு உலகக்கோப்பை வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தெரிவிக்கும் ஜஹீர் கான் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் பயணத்தை நீங்கள் பார்க்கும் போது அவர் எந்த வீரரும் சந்திக்காத கடினமான சூழ்நிலைகளுக்குள் சென்றார். முதலில் கிரிக்கெட்டில் ஒன்றியிருக்கும் அனைவரும் அவர் மீண்டும் களத்தில் விளையாடுவதை விரும்புவார்கள். இருப்பினும் அவர் தாண்டுவதற்கு நிறைய தடைகள் இருக்கிறது”
இதையும் படிங்க: என்னய்யா உருட்டா இருக்கு.. சொல்லவே இல்ல.. இலங்கை வாரியத்தின் போலியான அறிவிப்பை மறுத்த ஜான்டி ரோட்ஸ்
“குறிப்பாக முதலில் அவர் கம்பேக் கொடுத்து விளையாட வேண்டும். இந்த லெவலில் அது எளிதல்ல. ஏனெனில் நீங்கள் மீண்டும் களத்திற்கு வந்து சூழ்நிலைகளுக்கு உட்பட்டு ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அதற்கு சற்று நேரம் தேவைப்படும். ஒருவேளை சீக்கிரமே அவர் ஃபார்முக்கு திரும்பினால் சிறப்பாக இருக்கும். ஆனால் அனைத்தையும் மனதில் வைத்து பார்க்கும் போது ஒருவேளை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அவரை தேர்வு செய்யலாம் என்ற பாதையில் அணி பயணிக்கும் என நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.