இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களின் சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்தத் தொடரில் இந்திய அணி ரவி பிஸ்னோய், அக்சர் படேல், தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 ஸ்பின்னர்களை பயன்படுத்தி வருகிறது.
அதற்காக அர்ஷ்தீப் சிங்கை முழு நேர வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தி வருகிறது. அந்தளவுக்கு தற்போது பாண்டியா முழுமையாக 4 ஓவர்கள் பவுலிங் செய்து இந்தியாவுக்கு பெரிய உதவியாக இருந்து வருகிறார். சூரியகுமார் யாதவ் புதிய கேப்டனாக வந்தது முதல் பாண்டியாவை நம்பி எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை பயன்படுத்தி வருகிறார்.
பாண்டியாவை நம்பி:
இந்நிலையில் காயத்தால் சிரமத்தை சந்தித்த பாண்டியா தற்போது அதையும் தாண்டி பவுலிங் துறையில் அசத்துவதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். அவரை நம்பியே சூரியகுமார் தற்போது எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை பயன்படுத்தி வருவதாகவும் ஜஹீர் கான் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா பவுலிங் செய்வதற்கு வந்தால் அணியின் மொத்த சமநிலையும் மாறுகிறது”
“கடந்த காலங்களில் அவர் முக்கியமான பவுலராக செயல்பட்டார் அல்லவா? அதே சமயம் அவர் காயங்கள், இடுப்பு பிரச்சனை போன்றவற்றுடன் போராடியதால் பவுலிங் செய்ய முடியாதது போல் தோன்றியது. ஆனால் மெதுவாக உறுதியாக நாம் அணிக்காக பவுலிங் செய்ய வேண்டும் என்பதை பாண்டியா புரிந்து கொண்டு முன்னேறி வந்தார். மிகவும் முக்கியமான ஒன்றாகும்”
ஜஹீர் கான் பாராட்டு:
“அவருடைய புள்ளிவிவரங்கள் அதற்கு ஆதரவு கொடுக்கிறது. ஹர்திக் பாண்டியாவும் தாம் பவுலிங் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார். அதை தற்போது தொடருக்காக அவர் தயாராவதிலிருந்து தெளிவாக பார்க்க முடிகிறது. அவர் அதை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பது நல்ல அறிகுறியாகும்”
இதையும் படிங்க: ஐசிசி விருதிலும் நாயகனாக ஜொலிக்கும் பும்ரா.. வேறு எந்த ஆசிய – இந்திய ஃபாஸ்ட் பவுலரும் செய்யாத சாதனை
“அவர் தற்போது முழுமையாக பவுலிங் செய்வதால் இந்திய அணி 3 அல்லது 4 ஸ்பின்னர்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. அவர்கள் ஹர்திக் பாண்டியா இந்த வேலையை செய்வதற்கு முழுமையாக நம்புவதே இதற்கு காரணமாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



