ஐசிசி விருதிலும் நாயகனாக ஜொலிக்கும் பும்ரா.. வேறு எந்த ஆசிய – இந்திய ஃபாஸ்ட் பவுலரும் செய்யாத சாதனை

Jasprit Bumrah
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2024 காலண்டர் வருடத்தில் அசத்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த கௌரவ விருதில் 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அந்த விருதை பும்ரா வென்றதில் ஆச்சரியம் இல்லை என்றே சொல்லலாம்.

ஏனெனில் கடந்த வருடம் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் காயத்தையும் கடந்து கில்லியாக பவுலிங் செய்த அவர் 13 போட்டிகளில் 71 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். அதன் வாயிலாக கடந்த வருடம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். மேலும் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஜொலிக்கும் பும்ரா:

அதன் வாயிலாக ஒரு ஆஸ்திரேலிய தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்தார். குறிப்பாக முதல் போட்டியில் விக்கெட்டுகள் எடுத்த பும்ரா கேப்டனாக இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தங்களது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்கவும் அவர் உதவினார்.

இது போக 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இருபதுக்கும் குறைந்த சராசரியில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்திருந்தார். அதன் காரணமாக 2024ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை ஜஸ்ப்ரித் பும்ரா வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

வரலாற்றுச் சாதனை:

ஜஹீர் கான் உட்பட வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த சாதனையை படைத்ததில்லை. மேலும் ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன், ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஜான்சன், பட் கமின்ஸ் ஆகியோர் அந்த விருதை வென்றுள்ளார்கள்.

இதையும் படிங்க: பதவி வழங்க முன்வந்த நிர்வாகம்.. நோ சொல்லி பெரிய மனசை காட்டிய விராட் கோலி – என்ன நடந்தது?

ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட வேறு எந்த ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களும் வென்றதில்லை. மொத்தத்தில் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் ஏற்கனவே நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா ஜொலித்து வருகிறார். அவருடைய மணிமகுடத்திற்கு இந்த விருது மற்றுமொரு மாணிக்கமாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement