ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது இரண்டாவது போட்டியில் இன்று கான்பூர் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றும்.
ஆஸ்திரேலிய தொடரில் அவர் இடம்பிடிப்பார் :
அதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த டி20 தொடர் முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது.
எதிர்வரும் இந்த டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதி. இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதற்கு ஆஸ்திரேலிய தொடர் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கடந்த இருமுறை ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம் கிடைக்கும் என்று குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் இளம் வீரரான ஆகாஷ் தீப்புக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தேர்வாவது உறுதி என்று கூறியுள்ளார். ஏனெனில் தற்போது முகமது ஷமி காயமடைந்ததன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுள்ள அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்று ஜாஹீர் கான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கோட்டை விட்ட சிஎஸ்கே அணிக்கு விழுந்த அடி.. கண்ணீர் மல்க விடைபெற்ற ப்ராவோவை தூக்கிய ஐபிஎல் அணி
மேலும் ஆஸ்திரேலிய தொடரிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்றும் ஜாஹீர் கான் கூறியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆகாஷ் தீப் விளையாடியிருந்தாலும் புதிய பந்தில் அற்புதமாக பந்துவீசும் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது உறுதி என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



