இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை தற்போது ஐபிஎல் நிர்வாகம் தீவிரபடுத்தி உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த கம்பீர், அபிஷேக் நாயர் உள்ளிட்ட சிலர் இந்திய அணிக்கு சென்றுள்ளதால் கொல்கத்தா அணியில் முக்கிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று குஜராத் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஷிஷ் நெஹ்ராவும் அந்த பதிவிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பாண்டிங்கும் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படி ஒவ்வொரு அணியிலுமே பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மோர்கலும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அந்த அணிக்கு தற்போது ஆலோசகர் பதவி காலியாக இருக்கிறது. அந்த பதவிக்கு தான் தற்போது ஜாஹீர் கானை லக்னோ அணியின் நிர்வாகம் அணுகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வாழ்த்துக்கள் பும்ரா ஆனா அது உங்களுக்கு வேணாம்.. அப்றம் பாபர் அசாம் மாதிரி ஆகிடுவீங்க.. பசித் அலி அட்வைஸ்
இந்திய அணிக்காக கடந்த 2000-ஆவது ஆண்டு அறிமுகமான ஜாஹீர் கான் 2014-வரை 92 டெஸ்ட் போட்டிகள், 200 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 100 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



