இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தோனி கேப்டன்சி செய்த போது இந்திய அணிக்காக குல்தீப் மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகிய இருவரே முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்தனர்.
நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னர் அவர்தான் : யுஸ்வேந்திர சாஹல்
ஆனால் நாளடைவில் ஏற்பட்ட கேப்டன்சி மாற்றங்களால் ஓரங்கட்டப்பட்ட யுஸ்வேந்திர சாஹல் அணியின் காம்பினேஷனை கணக்கில் வைத்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டார். திறமை இருந்தும் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் அவ்வப்போது இந்திய அணிக்காக கிடைக்கும் வாய்ப்புகளில் கம்பேக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
அந்த வகையில் 2024 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஆனாலும் பிளேயிங் லெவனில் ஒரு வாய்ப்பு கூட அவருக்கு வழங்கப்படவில்லை. தற்போது 34 வயதை எட்டியுள்ள அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்கிற முனைப்புடன் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடி இருந்தார்.
தற்போது எதிர்வரும் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் அவர் பஞ்சாப் அணிக்காக தேர்வாகியுள்ள வேளையில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் இருந்து வரும் அவர் ஒரு பிரத்தேக பேட்டி ஒன்றில் கலந்து கொள்கையில் : உலகின் தற்போதைய நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : தற்போதைய உலகின் நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தான். அவருடன் நான் பல்வேறு போட்டிகளில் இணைந்து விளையாடி உள்ளேன். சர்வதேச போட்டிகளானாலும் சரி, உள்ளூர் போட்டிகளாக இருந்தாலும் சரி அவருடைய பந்துவீச்சு என்பது மிகச் சிறப்பான ஒன்று. அவருடன் இணைந்து எப்போதுமே பந்து வீசுவது என்பது எனக்கு பிடிக்கும். ஏனெனில் நாங்கள் இருவருமே ஒரே பாணியில் பந்து வீசக்கூடியவர்கள்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சிக்கு கவுதம் கம்பீரால் வரப்போகும் பிரச்சனை – கம்பீரின் முடிவு என்ன?
களத்திற்கு உள்ளேவும், களத்திற்கு வெளியேவும் அவருடன் நல்ல நட்பு இருக்கிறது. இப்போது இருக்கும் சூழலில் கூட குல்தீப் யாதவ் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.



