இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் கிடைக்க முடியாமல் தவித்து வரும் யுஸ்வேந்திர சாஹல் தற்போது உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சஞ்சு சாம்சன் தான் பெஸ்ட் ஐ.பி.எல் கேப்டன் : யுஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் மீண்டும் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையாக உழைத்து வருகிறார். ஆனாலும் தற்போது 35 வயதாகும் யுஸ்வேந்திர சாஹல் இனி இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடரில் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் சந்தித்த மிகச்சிறப்பான ஐ.பி.எல் கேப்டன் என்றால் அது சஞ்சு சாம்சங் தான் என்று சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் உண்மையிலேயே அற்புதமான ஒரு கேப்டன். ஏனெனில் அவரது தலைமையின் கீழ் நான் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராக மாறியதாக உணர்கிறேன்.
எந்த ஒரு கேப்டனுமே என்னை டெத் ஓவர்களில் பந்துவீச பயன்படுத்தி கிடையாது. ஒரு ஸ்பின்னரை இறுதி கட்ட ஓவர்களில் வீச வைப்பதற்கு கேப்டன்களுக்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த வகையில் சஞ்சு சாம்சன் என்னை ஒரு மிகச்சிறந்த டெத் பவுலராக மாற்றினார். அதுமட்டுமின்றி அவரது தலைமையின் கீழ் தான் நான் இறுதிகட்ட ஓவர்களின் போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாக உணர்கிறேன்.
அவர் எப்பொழுதுமே ஒரு பந்துவீச்சாளரை தொந்தரவு செய்தது கிடையாது. உங்களிடம் இருக்கும் திறனை வெளிக்காட்டுங்கள் என்று நமக்கு ஆதரவு மட்டுமே தருவார் என சாஹல் கூறியிருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் 3 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க : பேட்டிங் மட்டும் இல்ல.. இந்த விடயங்களுக்காகவும் விராட் கோலி சீரியஸா உழைக்குறாரு – சுப்மன் கில் பாராட்டு
அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு 17 போட்டிகளில் விளையாடிய அவர் 27 விக்கெட்டுகளையும், 2023-ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய அவர் 21 விக்கெட்டுகளையும், 2024-ஆம் ஆண்டு 15 போட்டிகளில் விளையாடிய அவர் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2024-ஆம் ஆண்டு அவரை வெளியேற்றியிருந்தது. அதன் பின்னர் 2025-ஆம் ஆண்டு 18 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய விலைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட அவர் இந்த ஆண்டும் தொடர்ச்சியாக அதே அணியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



