ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பங்கேற்றன. ப்ராபோர்ன் மைதானத்தில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்த ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்று 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 மிரட்டலாக பேட்டிங் செய்து 217/5 ரன்கள் குவித்தது.
அவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அதன் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து அதிரடியான அடித்தளமிட்டனர். இதில் படிக்கல் 24 (18) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சரவெடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (19) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2-வது சதமடித்த பட்லர்:
மறுபுறம் தொடர்ந்து அசத்தலாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த பட்லர் 61 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதமடித்து 103 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மையர் 2 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 26* (13) ரன்கள் குவித்து அதிரடி பினிஷிங் கொடுத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 217 என்ற மெகா இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு முதல் பந்திலேயே ரன் எதுவுமின்றி சுனில் நரேன் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
அதனால் ஏற்பட்ட சரிவுக்கு அஞ்சாமல் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை மீட்டெடுத்தார். இதில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் உட்பட 58 (28) ரன்கள் எடுத்து ஆரோன் பின்ச் ஆட்டமிழக்க அடுத்து வந்த நிதிஷ் ராணா 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
சஹால் மேஜிக்:
போதாக்குறைக்கு அடுத்து வந்த ஆண்ட்ரே ரசல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் வெற்றிக்காக போராடியதால் கடைசி 4 ஓவர்களில் 40 ரன்கள் என்ற நிலைமை போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பந்தை கையிலெடுத்த சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வென்ற சஹால் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை 6 (7) ரன்களில் காலி செய்து 4-வது பந்தில் 7 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 85 (51) ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயரையும் எல்பிடபிள்யூ செய்தார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்த 2 பந்துகளில் சிவம் மாவி, பட் கமின்ஸ் என அடுத்து களமிறங்கிய வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்து ஐபிஎல் 2022 தொடரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலராக சாதனை படைத்தார்.
அதோடு கொல்கத்தாவின் கதை முடிந்தது என நினைத்த வேளையில் கடைசியில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 21 (9) ரன்களை குவித்த உமேஷ் யாதவ் ராஜஸ்தானுக்கு அச்சுறுத்தலை கொடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா போராடி தோல்வி அடைந்தது.
போஸ் கொடுத்த சஹால்:
இந்த திரில்லான வெற்றிக்கு பட்லர் சதமடித்து முக்கிய பங்காற்றினாலும் அதைவிட ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுக்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்களை பதிவு செய்த 21-வது பவுலராகவும் ராஜஸ்தானுக்காக ஹாட்ரிக் எடுத்த 5-வது பவுலராகவும் சாதனை படைத்தார். மேலும் இதுவரை 6 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கான ஊதா தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் எடுத்தபோது அதை கொண்டாடும் வகையில் துள்ளிக்குதித்து மைதானத்தில் ஓடிய அவர் ஒரு கட்டத்தில் ஒருபுறம் சரிந்தவாறு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாடியது ரசிகர்களை கவர்ந்தது. இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 2019 உலகக் கோப்பையின் போது ஒரு போட்டியில் விளையாடாத போதிலும் பவுண்டரி அருகே அமர்ந்திருந்த என்னை வைத்து மிகவும் பிரபலமான அந்த மீம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என கூறினார்.
இலங்கைக்கு எதிராக 2019இல் நடந்த அப்போட்டியில் இந்திய அணியில் இடம்பெறாத சஹால் கூல் ட்ரிங்க்ஸ் தூக்குபவராக செயல்பட்ட நிலையில் பவுண்டரி பக்கத்தில் ஸ்டைலாக கால்மேல் கால் போட்டு படுத்துக்கொண்டு போட்டியை பார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் அப்போது வைரலாகின. ஆனால் அதே மீம் போஸை இப்போது நிஜமாகவே தனது அணியின் வெற்றிக்கு பங்காற்றி களத்தில் செய்து காட்டிய சஹால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதுபோன்ற ஒரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உத்வேகத்தை கொடுத்து முக்கிய காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தான் அந்த புகழ் அனைத்தும் சேரும் என்று அவர் நேற்றைய போட்டியின் முடிவில் தெரிவித்தார்.



