தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூன் 12-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் வெறும் 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் இசான் கிசான் 34 (21) ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 40 (35) ரன்களும் எடுக்க கடைசி நேரத்தில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 30* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.
அதை தொடர்ந்து 149 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4, பிரிட்டோரியஸ் 4, வேன் டெர் டுஷன் 1 என 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த புவனேஸ்வர் குமார் நல்ல இந்தியாவுக்கு தொடக்கம் கொடுத்தார். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ஹென்றிச் க்ளாஸென் – கேப்டன் பவுமா ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.
அதில் பவுமா 35 (30) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய க்ளாஸென் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் 2 – 0* (5) என்ற கணக்கில் இந்த தொடரில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
சொதப்பும் சஹால்:
மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முக்கிய நேரத்தில் சிறப்பாகச் செயல்பட தவறிய இந்தியா சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே கோப்பையை கைப்பற்ற முடியும் பரிதாப நிலைமைக்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்த 2 தோல்விகளுக்குமே இந்தியாவின் சுமாரான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சுழல் பந்துவீச்சு துறையில் முதன்மை பவுலராக கருதப்படும் சஹால் விகெட் எடுப்பதை மறந்து ரன்களை வாரி வழங்கி பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறார்.
டெல்லியில் நடந்த முதல் போட்டியில் 2.1 ஓவரிலேயே 26 வரங்களை வாரி வழங்கினார் என்பதற்காக அவருக்கு முழுமையான 4 ஓவர்களை கேப்டன் ரிஷப் பண்ட் வழங்கவில்லை. அதற்காக முன்னாள் வீரர்களும் கடுமையாக திட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட அவர் இப்போட்டியில் முழுமையாக 4 ஓவர்களை வழங்கினார். ஆனால் கொஞ்சம் கூட முன்னேற்றமடையாத அவர் 4 ஓவர்களில் 49 ரன்களை 12.25 என்ற மோசமான எக்கனாமியில் மோசமாக பந்துவீசி 1 விக்கெட்டை எடுத்தார். இத்தனைக்கும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்காக 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்தார்.
அட்டாக் பவுலிங்:
அதனால் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் இடம் பிடிக்க முடியாத அவர் இந்திய அணியில் நிலையான இடத்தை மீண்டும் பிடித்தார். ஆனால் டேவிட் மில்லர் போன்ற தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பார்மை அப்படியே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தி சொல்லி அடிக்கும்போது இவர் மட்டும் அந்த பழைய பார்மை மறந்தாற்போல் மோசமாக பந்து வீசுவது ரசிகர்களுக்கு கவலையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகளை எடுக்க உதவிய பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்யும் பந்துவீச்சை சஹால் மறந்து விட்டாரா என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “வேகத்தை மாற்றுவது மிகவும் முக்கியம். ஒருவேளை கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பேன் என்று சஹால் நினைத்தால் அது நடக்காது. அது இடது கை பந்து வீச்சாளர்களின் வேலை. அவர் (சஹால்) அட்டாக் செய்து பந்துவீச வேண்டும் என்ற மனநிலைக்கு வர வேண்டும். அவர் 50 ரன்களை கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை எடுத்தால் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் 40 – 50 ரன்களை கொடுத்து விட்டு வெறும் 1 விக்கெட் எடுத்தால் அது பிரச்சனையாகும்”
“அவர் மெதுவாக பந்து வீசி பேட்ஸ்மேன் அடிப்பதற்கு தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும். அதற்காக ஒரு சில சிக்ஸர்கள் சென்றாலும் பரவாயில்லை. 2-வது போட்டியில் எந்த தென்னாப்பிரிக்கா வீரர்களும் சஹாலை இறங்கி அடிக்க முயற்சிக்கவில்லை. அப்படியானால் சஹால் வேகமாக பந்து வீசுகிறார் என்று அர்த்தம். இருப்பினும் அது போன்ற பந்துகளை அக்சர் படேல் தான் வீச வேண்டும். அவர் கிடையாது.
இதையும் படிங்க : INDvsRSA : இந்த காரணத்திற்காக தான் டி காக் 2 ஆவது டி20 போட்டியில் விளையாடல – உறுதி செய்த தெ.ஆ கேப்டன்
அடுத்த போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் சுழல் பந்துவீச்சாளர்கள் முன்வந்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதேபோல் ஐபிஎல் முடிந்து ஒரு வாரத்திலேயே அந்த பழைய பார்ம் மறந்து போச்சா என்று இந்தியா பெரிதும் நம்பியிருந்தாலும் சுமாராக செயல்படும் சஹாலை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.



