ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபுறம் பட்லர் அதிரடி காட்டிக் கொண்டிருக்க மறுபுறம் அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த படிக்கல் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 24 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நேரத்தில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு அதிரடியாக வெறும் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 38 (19) ரன்களை பட்டாசாக அடித்து 2-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை பறக்கவிட்டு மொத்தம் 61 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதமடித்து 103 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இது இந்த வருடத்தில் அவர் அடிக்கும் 2-வது சதமாகும்.
போராடிய கொல்கத்தா:
அதை தொடர்ந்து கடைசி நேரத்தில் களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மையர் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 26* (13) ரன்களை எடுத்து அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 218 என்ற பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தாவிற்கு முதல் பந்திலேயே சுனில் நரைன் எதிர்பாராத வண்ணம் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகி சென்றார்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்த தொடங்கினார். பவர்பிளே ஓவர்களில் பட்டாசாக விளையாடிய இந்த ஜோடி 9 ஓவர்களில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தபோது 9 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 58 (28) ரன்கள் எடுத்த ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் களமிறங்கிய நிதிஷ் ராணா 18 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
சஹால் மேஜிக் ஹாட்ரிக்:
ஆனாலும் மறுபுறம் 51 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட அதிரடியாக விளையாடி தனது அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 85 ரன்கள் எடுத்து மிரட்டலாக பேட்டிங் செய்ததால் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 40 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் கொல்கத்தா போராடி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பந்தை கையில் எடுத்த ராஜஸ்தான் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் சஹால் 17-வது ஓவரின் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை 6 (7) ரன்களில் காலி செய்து 4-வது பந்தில் மிரட்டலாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யரை எல்பிடபிள்யூ செய்து 5-வது பந்தில் ஷிவம் மாவி, 6-வது பந்தில் பட் கமின்ஸ் என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்து அவுட் செய்தார். இதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெடுகளை எடுத்த முதல் பவுலராக சாதனை படைத்தார்.
இதனால் வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என ராஜஸ்தான் மூச்சு விடுவதற்குள் கடைசி நேரத்தில் பட்டைய கிளப்பிய உமேஷ் யாதவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (9) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். இதனால் 19.4 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து வெற்றியின் விளிம்பு வரை வந்த கொல்கத்தா போராடி தோற்றது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய ராஜஸ்தான் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது.
சஹால் முதலிடம்:
இந்த வெற்றிக்கு ஜோஸ் பட்லர் சதமடித்து முக்கிய பங்காற்றினாலும் அதைவிட 4 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில் மேஜிக் பந்துகளை வீசி ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தாவை சாய்த்த சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
1. அதிலும் முதல் 2.5 ஓவர்களில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 38 ரன்களை வாரி வழங்கிய அவர் அதன்பின் அடுத்த 7 பந்துகளில் வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தது ரசிகர்களை மிரள வைத்தது.
2. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து 21-வது பவுலர் என்ற பெருமையை சஹால் பெற்றார்.
3. மேலும் அஜித் சண்டிலா, பிரவின் தாம்பே, ஷேன் வாட்சன், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோருக்கு பின் ஹாட்ரிக் எடுத்த 5-வது ராஜஸ்தான் பவுலர் என்ற சாதனையும் படைத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் பஞ்சாப் (4) உள்ளது.
4. அத்துடன் ராஜஸ்தானுக்காக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர், கொல்கத்தாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் போன்ற சாதனைகளையும் அவர் படைத்தார்.
5. இப்படி மிரட்டலாக செயல்பட்டு வரும் சஹால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் 17 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்து எட்டாத உயரத்தில் ஜொலிக்கிறார் என்றே கூறலாம். ஏனெனில் 2-வது இடத்தில் தமிழக வீரர் நடராஜன் 12 விக்கெட்டுகளுடன் உள்ளார்.



