இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. மேலும் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையையும் வெல்ல முடியாமல் இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களையும் அடுத்தடுத்து வென்று இந்தியா சாதனை படைத்தது. அதன் வாயிலாக 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளது. அதை தற்சமயத்தில் ரசிகர்கள் மறக்க வேண்டாம் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் ஆதரவு:
அதே சமயம் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்வி ரசிகர்களை விட இந்திய வீரர்களுக்கு அதிக வலியை கொடுத்திருக்கும் என்றும் யுவராஜ் கூறியுள்ளார். அதனால் விரைவில் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி யுவராஜ் பேசியது பின்வருமாறு. “கடந்த 5 – 6 வருடங்களில் இந்தியா என்ன சாதித்தது என்பதை பாருங்கள்”
“ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை இந்தியா வென்று சாதித்துள்ளது. வேறு எந்த அணியும் அதை செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மாவை மக்கள் அதிகமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் சாதித்ததை ரசிகர்கள் மறந்து விட்டார்கள். அவர்கள் இந்த காலத்தின் மகத்தான வீரர்கள்”
கம்பேக் உறுதி:
“இந்த தோல்வி பரவாயில்லை. இது நம்மை விட அவர்களுக்கு அதிக வலியை கொடுத்திருக்கும். இங்கிருந்து இந்தியா எழும்பி வரும் என்று நான் உறுதியாக சொல்வேன். கௌதம் கம்பீர், அஜித் அகர்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தற்சமயத்தில் கிரிக்கெட்டில் சிறந்த மூளையை கொண்டவர்கள். எனவே இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை அவர்கள் தீர்மானிப்பார்கள்”
இதையும் படிங்க: இனிமேலும் தப்பிக்க முடியாது.. டெஸ்ட் கேரியர் வேணும்னா இதை செஞ்சாகனும்..ரோஹித், கோலிக்கு சாஸ்திரி அட்வைஸ்
“இந்த தோல்விகள் பற்றி பிசிசிஐ, ஜெய் ஷா ஆகியோர் விவாதித்து இந்திய கிரிக்கெட்டை சிறந்த வழியில் முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா அணியின் நலனுக்காக தம்மைத் தாமே நீக்கிக் கொண்டது பெரிய விஷயம் என்றும் யுவராஜ் பாராட்டியுள்ளார். 2023 உலகக் கோப்பை ஃபைனலுக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற ரோகித் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை மறக்கக்கூடாது என்றும் யுவராஜ் பாராட்டியுள்ளார்.



