ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தார்கள். அதன் காரணமாக அவர்களை அணியில் இருந்து நீக்குமாறு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். சொல்லப்போனால் கடைசி போட்டியில் ரோகித் சர்மா தம்மைத் தாமே அணியில் இருந்து நீக்கிக் கொண்டார்.
அதனால் அவர்களுடைய டெஸ்ட் கேரியர் தற்சமயத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய நியூசிலாந்து தொடர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறுவதை அம்பலப்படுத்தியதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். எனவே இனிமேலும் தப்பிக்க வழியில்லை என்பதால் அவர்கள் ரஞ்சிக்கோப்பையில் விளையாடினால் இங்கிருந்து அசத்த முடியும் என்று சாஸ்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
வேற வழியில்லை:
இது பற்றி ஐசிசி இணையத்தில் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “அவர்களுக்கு இடைவேளை இருந்தால் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடி எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நீளமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு 2 காரணங்கள் முக்கியமாக ஏற்படும்”
“ஒன்று நீங்கள் இந்த தலைமுறை வீரர்களுடன் பழக முடியும். மற்றொன்று அந்த தலைமுறை இளம் வீரர்களுடன் உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொடுக்க முடியும். அனைத்தையும் தாண்டி நீங்கள் சுழல் பந்துகளை அதிகமாக எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சமீப காலங்களில் இந்திய அணி சுழல் மைதானங்களில் நன்றாக விளையாடவில்லை. அதே சமயம் எதிரணியின் ஸ்பின்னர்கள் நன்றாக இருந்தால் இந்திய அணி தடுமாறுகிறது”
சாஸ்திரி அட்வைஸ்:
“அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் ஓரிரு முறை அதிர்ஷ்டத்துடன் தப்பிக்க முடியும். ஆனால் அனைத்து நேரங்களிலும் முடியாது. எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு நியூசிலாந்து அணி இந்தியாவை அம்பலப்படுத்தியதை பார்த்தீர்கள். அதை விட்டு விடுகிறேன். தற்போதைய நிலையில் விராட் ரோஹித் ஆகியோருக்கு ஆர்வம் மற்றும் ஆசை வேண்டும்”
இதையும் படிங்க: ஒரே நாளில் 30.. கபில் தேவை நெருங்க முடியலன்னா டாட்டா சொல்லிட்டு அதை மறந்துடுங்க.. பும்ரா மீது சந்து அதிருப்தி
“ஏனெனில் நீங்கள் 30 வயதை கடந்துள்ளீர்கள். ஒருவர் 36 மற்றொருவர் 38 வயதை தாண்டியுள்ளார். எனவே கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதும் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது முக்கியம்” என்று கூறினார். மொத்தத்தில் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இருவரும் ஒன்றாக விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



