ரொம்ப திட்டாதீங்க பாவம் என்ன செய்வாரு? தோனிக்கு கிடைச்ச அந்த வசதி ரோகித்துக்கு கிடைக்கல – விமர்சனங்களுக்கு யுவி பதிலடி

Yuvraj Singh
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன், இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் கிரிக்கெட் அணிகளை சமாளித்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. முன்னதாக இருதரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காகவே சர்ச்சைக்குரிய முறையில் பதவி வழங்கினார்.

அவரை தொடர்ந்து 5 ஐபிஎல் வென்ற அனுபவத்தை கொண்ட காரணத்தால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா அழுத்தமான 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுதோல்வியை சந்தித்தது. அதே போல ஒரு காலத்தில் ஹிட்மேன் என கொண்டாடுவதற்கேற்றார் போல் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சமீப காலங்களாகவே முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாற்றமாக செயல்பட்டு தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார்.

- Advertisement -

யுவி ஆதரவு:
அத்துடன் சுமாரான ஃபிட்னஸை கொண்டிருக்கும் அவர் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமையால் ஓய்வெடுப்பதால் கடந்த 2022இல் வரலாற்றிலேயே 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதனால் ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள அவர் 2023 உலகக் கோப்பையை வெல்ல தவறினால் கேப்டன்ஷிப் பதவியை இழக்கும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலங்களாகவே ஐசிசி தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் எம்எஸ் தோனியை போன்ற கேப்டன் கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஏனெனில் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக மாபெரும் சரித்திரம் படைத்துள்ள அவரது தலைமையில் ஐசிசி தொடர்களில் எப்போதுமே இந்தியா சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இந்நிலையில் 2007, 2011 ஆகிய வருடங்களில் நடைபெற்ற உலகக் கோப்பைகளை சிறந்த வீரர்களை கொண்டிருந்த காரணத்தாலேயே எம்எஸ் தோனி வென்றதாக அந்த 2 தொடர்களின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

அதே போல 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருந்த போதிலும் சரியான அணி கிடைக்காததாலேயே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக பும்ரா போன்ற வீரர்கள் காயத்தால் வெளியேறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மாவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

“ரோஹித் சர்மா நல்ல கேப்டன். ஆனால் நீங்கள் அவருக்கு நல்ல அணியையும் கொடுக்க வேண்டும். எம்எஸ் தோனியும் சிறந்த கேப்டன். ஆனால் அவரிடம் அனுபவமிக்க வீரர்கள் நிறைந்த நல்ல அணி இருந்தது. எனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு நல்ல அனுபவத்தைக் கொண்டிருப்பதால் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். குறிப்பாக அழுத்தமான தருணங்களில் அவர் சிறப்பாக செயல்படக்கூடிய தன்மையை கொண்டவர்”

இதையும் படிங்க:இது என்ன உலக கோப்பையா? இல்ல ரன்ரேட் தேவையா? சுயநலமாக நடந்து கொண்ட கேப்டன் பாண்டியாவை – விளாசும் முன்னாள் வீரர்

“எனவே வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனுபவமிக்க கேப்டனிடம் நல்ல அணியையும் கொடுக்க வேண்டும். எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரிடம் நல்ல அணியும் இருந்தது அல்லவா” என்று கூறினார். அவர் கூறுவது போல சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011 உலக கோப்பையை வென்றது உண்மையாக இருந்தாலும் தாம் உருவாக்கிய ரோகித் சர்மா, தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement