
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவருடைய தலைமையில் இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அந்த வரலாறு காணாத தோல்வி ஆறுவதற்குள் ஆஸ்திரேலிய மண்ணிலும் தோற்ற இந்திய அணி 10 வருடங்கள் கழித்து பார்டர் – காவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது. அந்தத் தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதே போல அணியை சரியாக தேர்ந்தெடுக்காத கௌதம் கம்பீரும் தோல்விக்கு காரணமானதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செயல்பாடுகளை ஒவ்வொரு தொடரின் முடிவிலும் மதிப்பிடுவது சரியல்ல என்று ஜாம்பவான் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். மாறாக மூன்று அல்லது ஐந்து வருடங்களின் முடிவில் பார்ப்பதே சரியான மதிப்பீடு என்று அவர் ஆதரவு கொடுத்துள்ளார். அதே போல 5 ஐபிஎல் கோப்பை, ஒரு டி20 உலகக் கோப்பையை ரோகித் வென்றது போல் எத்தனை கேப்டன்கள் வென்றுள்ளார்கள் என்றும் யுவ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நீங்கள் ஒவ்வொரு தொடரின் முடிவிலும் செயல்பாடுகளை பார்க்கிறீர்கள். இந்தியா ஒரு தொடரில் வென்றால் நல்ல விஷயங்களை பேசுகிறீர்கள். தோல்வியை சந்தித்தால் அப்படியே நேர்மாறாக விமர்சிக்கிறீர்கள். பொதுவாக நீங்கள் எப்போதும் 3 – 5 வருட காலத்தில் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்”
“இப்போது தான் கௌதம் கம்பீர் இந்திய அணிக்குள் வந்துள்ளதால் அவருக்கு கொஞ்சம் நேரம் தேவை. ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்றுள்ளார். அதற்கு முன் இந்தியாவை உலகக்கோப்பை ஃபைனல் வரை அவர் அழைத்துச் சென்றார். அதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்”
இதையும் படிங்க: ஸ்பெஷல் பரிசுத் தொகையுடன்.. ஆஸியில் அசத்திய நிதிஷ் ரெட்டியை நேரில் வாழ்த்திய சந்திரபாபு நாயுடு
“அப்படிப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அணியின் நலனுக்காக தன்னையே நீக்கி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். கடந்த காலங்களில் அவ்வாறு எத்தனை கேப்டன்கள் செய்துள்ளார்கள்? என்பதை என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி ரோகித், கம்பீர் தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.