வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபத் தோல்வியை சந்தித்த இந்தியா இத்தொடரை வெல்வதற்கு எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் தரமாக பந்து வீசிய வங்கதேசத்திடம் திண்டாடிய இந்தியா வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்கள் எடுத்தார்.
அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் முதல் 40 ஓவர்களில் தரமாக பந்து வீசிய இந்தியாவிடம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் வெற்றி உறுதியான மிதப்பில் செயல்பட்ட இந்தியாவின் அஜாக்கிரதையை பயன்படுத்திய மெகதி ஹசன் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 38* (39) ரன்கள் குவித்து வரலாற்றுத் தோல்வியை பரிசளித்தார். அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மாவும் சுமாராக செயல்பட்டது நிறைய கேள்விகளை விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தங்கமான கேப்டன்:
குறிப்பாக கடைசி 6 ஓவரில் வங்கதேசத்தின் டெயில் எண்டர்கள் அமைத்த 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் சுமாராகவே இருந்தது. அதிலும் 10* (11) ரன்கள் எடுத்த முஸ்தஃபீசர் ரகுமான் எனும் இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்த போது ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரை 5 ஓவர்களை வீசி 2 முக்கிய விக்கெட்களை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் அந்த முக்கிய நேரத்தில் ரோகித் சர்மா பயன்படுத்தாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக தடுமாறுவார்கள் என்பது அண்டர்-19 அளவில் விளையாடும் வீரர்களுக்கு கூட தெரியும்.
அப்படி சுமாராக கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா இது மட்டுமல்லாமல் சமீபத்திய டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையிலும் இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பலாக முடிவுகளை எடுத்த காரணத்தாலேயே இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. அதை விட கேப்டனாக பொறுப்பேற்ற பின் பேட்டிங்கில் ரொம்பவே திண்டாடும் அவர் பணிச்சுமை என்ற பெயரில் நிறைய தொடர்களில் ஓய்வு பெற்றதால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு கேப்டன்களை பயன்படுத்த வேண்டிய அவலமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
அதன் காரணமாக இதற்கு விராட் கோலியே பரவாயில்லை என்று தெரிவிக்கும் ரசிகர்கள் 35 வயதை கடந்து விட்ட ரோகித் சர்மாவை கழற்றி விடுவதற்கான நேரம் வந்து விட்டதாக சமீப காலங்களாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். சொல்லப்போனால் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்குவதற்காக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சுமாரான கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மாவின் ரேட்டிங் என்ன என்று பிரபல இணையத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு 10க்கு 10 என்று பதிலளித்த முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அவரை விட தரமான தங்கமான கேப்டன் கிடைக்க மாட்டார் என்ற வகையில் மறைமுகமாக கூறியுள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக 17 போட்டிகளில் 13 வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் 39 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : கிங் கோலி பெயர் நியாபகம் இருக்கா? வெற்றி மிதப்பில் பேசிய மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி – நடந்தது என்ன?
அந்த வகையில் ஒரு சில போட்டிகளில் சந்தித்த தோல்விகளுக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி சந்தேகப்படத் தேவையில்லை என்று யுவராஜ் சிங் மறைமுகமாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த வெற்றிகள் அனைத்தும் சாதாரண இரு தரப்பு தொடர்களில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.