2024 டி20 உ.கோ இந்தியா வெல்வது கஷ்டம்.. அந்த 2 வெளிநாட்டு அணிக்கே வாய்ப்பிருக்கு.. யுவி கணிப்பு

Yuvraj Singh
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா லண்டன் ஓவலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சுமாராக செயல்பட்டு கோப்பையை கோட்டை விட்டது.

அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

யுவி கணிப்பு:
இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை துவங்கியுள்ள இந்தியா அதற்காக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்று தென்னாப்பிரிக்க தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ரசிகர்கள் காத்திருக்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் 2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை பற்றி தம்ப்ஸ் அப் ஃபேன்ஸ் பல்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை எனக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது. குறிப்பாக இம்முறை தென் ஆப்பிரிக்கா வெல்லும் என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

“அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐசிசி தொடரை வென்றதில்லை. இருப்பினும் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர்கள் வெற்றியை நோக்கி சிறப்பாக வந்தனர். அதே போல பாகிஸ்தான் அணியும் இந்த உலகக் கோப்பையில் மிகவும் ஆபத்தானவர்களாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார். ஆனால் அதே நிகழ்ச்சியில் பேசிய கௌதம் கம்பீர் பாகிஸ்தான் அணியினர் ஃபீல்டிங் துறையில் மோசமாக செயல்படுவதால் வெல்வதற்கு வாய்ப்பு குறைவு என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: டெஸ்ட் அணியில் இடம்பெறாத போதும் இந்திய வீரர்களுடன் டக் அவுட்டில் அமர்ந்திருந்த ரிங்கு சிங் – ஏன் தெரியுமா?

மேலும் கடந்த 6 – 7 வருடங்களில் தொடர்ந்து ஐசிசி நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக வரும் இந்தியா கோப்பையை வெல்வதற்கு இன்னும் ஒரு படி மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் கம்பீர் கூறினார். எனவே விரைவில் 100% சிறப்பாக விளையாடிய இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்புவதாக கௌதம் கம்பீர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement