ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல இந்தியா அந்த தொடரில் 3 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் புஜாரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.
ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் நங்கூரமாக பேட்டிங் செய்த அவர் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் தற்போதைய அணியில் இருக்கும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ளார்கள். அதனாலேயே சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த முன்னிலையில் 46க்கு ஆல் அவுட்டாகி இந்தியா தோல்வியையும் சந்தித்தது.
புஜாரா மாதிரி:
இந்நிலையில் புஜாரா போல சுப்மன் கில், ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரிஷப் பண்ட் அட்டாக் செய்து ஆஸ்திரேலியாவை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஒவ்வொரு செஷனாக விளையாட வேண்டும்”
“ஆஸ்திரேலியாவில் நீங்கள் நேரத்தை செலவிட்டு விளையாடினால் நல்ல மதிப்பை பெறுவீர்கள். ஏனெனில் அங்குள்ள பிட்ச்கள், பவுன்ஸ் உண்மையாக இருக்கும். கடந்த முறை ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் அட்டாக் செய்யும் விளையாட்டை விளையாடினர். புஜாரா களத்தில் இருந்து தன்னுடைய உடலில் அடி வாங்கி விளையாடினார். புஜாரா அதிரடியாக விளையாடக் கூடியவர் கிடையாது”
யுவராஜ் அட்வைஸ்:
“ஷார்ட் பந்துகளுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள் ஆஸ்திரேலியாவில் பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இம்முறை நாம் ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா வரும் போது அசத்த வேண்டும். விராட் கோலி நம்முடைய முன்னணி வீரர். ரிஷப் பண்ட் 5வது இடத்தில் அட்டாக் செய்யும் விளையாட்டை தொடர வேண்டும். அவருடைய ஷாட்டுகள் பார்க்க நன்றாக இல்லையென்றாலும் தன்னுடைய ஆட்டத்தை தொடர வேண்டும்”
இதையும் படிங்க: ஆஸி தொடருக்கு பயிற்சி போதும்.. இனியாவது இந்தியா இதை நிறுத்தனும்.. நியூஸிலாந்து தோல்வி பற்றி கங்குலி
“ஆஸ்திரேலியாவில் கடந்த முறை விளையாடியதை போலவே இம்முறையும் நீங்கள் தயாராக வேண்டும் என்று சுப்மன் கில்லிடம் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு சொன்னேன். கடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக அவருக்கு நான் 19 நாட்கள் பயிற்சிகளை கொடுத்தேன். தற்போது இன்னும் அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் வெளிநாட்டு மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை அடிப்பதற்கான பசியுடன் இருப்பார்” என்று கூறினார்.



