பஞ்சாப்பை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படுகிறார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவருக்கு கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் ஓப்பனிங்கில் வெளுத்து வாங்கும் அவர் குறுகிய காலத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற வீரராகவும் அபிஷேக் உலக சாதனை படைத்துள்ளார். பெரும்பாலான போட்டிகளில் 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றுவதே அதற்கு காரணமாகும். அப்படி தம்முடைய வெற்றிகரமான ஆட்டத்திற்கு முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் முக்கிய பங்காற்றியுள்ளதாக அபிஷேக் ஷர்மா பலமுறை தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளரின் சப்போர்ட்:
இந்நிலையில் தம்முடைய காலத்தில் வெற்றிகரமாக விளையாடுவதற்கு பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் போதுமான ஆதரவளித்ததாக யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதே போல தற்போதைய கேப்டன் சூரியகுமார், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அபிஷேக் சர்மாவுக்கு போதுமான ஆதரவளிப்பாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனாலேயே அபிஷேக் ஷர்மாவால் பயமின்றி அதிரடியாக விளையாட முடிவதாக யுவ்ராஜ் கூறியுள்ளார்.
இது பற்றி யுவ்ராஜ் சிங் பேசியது பின்வருமாறு. “பயமின்றி விளையாடுவது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கொடுக்கும் ஆதரவில் இருந்தும் வருகிறது என்று நினைக்கிறேன். உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பயமின்றி உங்களுடைய ஆட்டத்தை விளையாடுவதற்கான அனுமதியைக் கொடுக்கும் போது உங்களை நீங்களே வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். நானும் அங்கிருந்து தான் வந்தேன்”
கேரி கிர்ஸ்டன் போல:
“கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்த போது, நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை உங்களது வழியில் விளையாடினால் இந்தியாவை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வர முடியும் என்று என்னிடம் எப்போதும் சொல்வார். அதே போல கம்பீர் மற்றும் சூரியகுமார் அவருக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கிறார்கள்”
இதையும் படிங்க: 4வது டி20 நடைபெறும் கராரா கோல்ட் கோஸ்ட் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“நீங்கள் களத்துக்குச் சென்று உங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 10க்கு 6 போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்று அபிஷேக்கிடம் அவர்கள் சொல்கிறார்கள். அதையே அபிஷேக் செய்கிறார்” என்று கூறினார். அப்படி டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடும் அபிஷேக் ஷர்மாவுக்கு அடுத்ததாக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைக் கொடுக்க இந்திய அணி ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.



