
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இருந்து வருகிறது. ஏகப்பட்ட கேப்டன் மாற்றம், பயிற்சியாளர் மாற்றம், நிர்வாகக்குழு மாற்றம் என அந்த அணியில் பல்வேறு விடயங்கள் நடைபெற்று இருந்தாலும் இன்றளவும் ஒரு கோப்பையை கைப்பற்ற முடியாமல் டெல்லி அணியானது தவித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி செயல்பட்டு வந்தார். அவரது தலைமையின் கீழ் டெல்லி அணி மோசமான செயல்பாட்டையை வெளிப்படுத்தியது.
அதிலும் குறிப்பாக 2026 ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி பிற்பாதியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆறாம் இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் முக்கிய சில மாற்றங்கள் அதிரடியாக நிகழ்த்தப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் வசம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாகம் பொறுப்பு ஒப்படைக்கப்பட இருக்கிறது.
இதன் காரணமாக சவுரவ் கங்குலியை அந்த அணியின் நிர்வாகம் நிர்வாக இயக்குனராக கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதோடு தற்போதைய பயிற்சியாளரான ஹேமங் பதானி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளர் கொண்டுவரப்படலாம் என்ற முடிவும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங்கை கொண்டு வர நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையையும் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டி20 போட்டிகளை பொருத்தவரை மிகப்பெரிய அனுபவமும், நேர்த்தியும் கொண்டுள்ள யுவராஜ் சிங் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரானால் வீரர்களுக்கு அது உத்வேகமாக அமையும் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 44 வயதான யுவ்ராஜ் சிங் இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் தொழில்முறை பயிற்சியாளர் குழுவில் எந்த ஒரு பொறுப்பிலும் இடம்பெற்றது கிடையாது.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டை விடுவிப்பது நியாயமல்ல.. இஷான் கிஷன் விடயத்தில் அவசரம் வேண்டாம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
இவ்வேளையில் முதல் முறையாக 2027 ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரரான அபிஷேக் சர்மாவிற்கு பயிற்சி அளித்துள்ள யுவராஜ் சிங் அவரை தவிர்த்து பிராப் சிம்ரன் சிங், அப்துல் சமாத், பிரியான்ஸ் ஆர்யா போன்ற வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் பேட்டிங் ஆலோசனைகளை தந்து அவர்களது ஆட்டத்தின் திறனை மேம்படுத்த உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.